இடுவம்பாளையத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்: கழிவுநீர் கால்வாய் அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


இடுவம்பாளையத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்: கழிவுநீர் கால்வாய் அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 7 Oct 2018 11:15 PM GMT (Updated: 7 Oct 2018 7:10 PM GMT)

திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் கழிவுநீர் கால்வாய் வசதி அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்,

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலும் பல பகுதிகளில் கடந்த நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக ஆங்காங்கே ரோடுகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருப்பூர் இடுவம்பாளையம் தனலட்சுமிநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழை காரணமாக, அந்த பகுதிகளில் உள்ள 40–க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைவெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்த பொதுமக்கள் அனைவரும் அருகில் உள்ள அரசு பள்ளியில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை தனலட்சுமிநகரை சேர்ந்த பொதுமக்கள் மழைக்காலங்களில் வீடுகளுக்குள் தொடர்ந்து மழைநீர் புகுந்து வருகிறது. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மழைவெள்ளம் வீடுகளுக்குள் புகாமல் சீராக செல்ல கழிவுநீர் வடிகால் வசதிகள் அமைக்க வேண்டும் எனக்கூறி தனலட்சுமிநகரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பூர் மத்திய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என மறுப்பு தெரிவித்தனர்.

இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதற்கிடையே மாநகராட்சி 4–வது மண்டல உதவி கமி‌ஷனர் கண்ணன் மற்றும் திருப்பூர் தெற்கு தாசில்தார் ரவிச்சந்திரன், மண்டல துணை தாசில்தார் முருகேஷ்வரன் ஆகியோர் அங்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் தனலட்சுமிநகர் பகுதிக்கு பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டது. அந்த எந்திரங்கள் மூலம் அந்தபகுதியில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி நடைபெற்றது. மேலும், ஆங்காங்கே மழைநீர் செல்ல கால்வாய்களும் அமைக்கப்பட்டன. இந்த பணிகள் தொடங்கிய பிறகே பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:–

எங்கள் பகுதியில் எப்போது மழை பெய்தாலும் இடுவம்பாளையத்தில் இருந்து மழைநீர் வந்து வீடுகளுக்குள் புகும் நிலை உள்ளது. இங்கு மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி தனியார் சிலர் கட்டிடம் கட்டியுள்ளனர்.

இதனால் தண்ணீர் செல்ல வழியின்றி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. எனவே மழைவெள்ளம் வீடுகளுக்குள் புகாமல் இருப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். கழிவுநீர் கால்வாய் வசதிகள் செய்து தர வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story