ரெயில்வே சுரங்கப்பாதையில் வெள்ளம் சூழ்ந்தது; கிராம மக்கள் சாலை மறியல்


ரெயில்வே சுரங்கப்பாதையில் வெள்ளம் சூழ்ந்தது; கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 9 Oct 2018 4:30 AM IST (Updated: 9 Oct 2018 12:26 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் கிராமங்களில் அமைக்கப்பட்ட ரெயில்வே சுரங்க பாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். கலெக்டர் நேரில் வந்து உடனடியாக நடவடிக்கை எடுத்ததால் மறியல் கைவிடப்பட்டது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே கூரியூர், லாந்தை, கருங்குளம் பகுதிகளில் ரெயில்வே நிர்வாகத்தின் சார்பில் ஆளில்லா ரெயில்வே கிராசிங்கை மாற்றி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுஉள்ளது. இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி அப்பகுதியினர் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சுரங்கப் பாதையால் மக்கள் எந்தவகையிலும் பாதிக்கப்படமாட்டார்கள் என்று ரெயில்வே நிர்வாகம் தரப்பில் உறுதிஅளிக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.

இந்த நிலையில் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் ரெயில்வே சுரங்கப்பாதை பகுதியில் மழைவெள்ளம் சூழ்ந்தது. இதனால் சுரங்கப்பதையின் இருபுறமும் மக்கள் சென்றுவர முடியாத வகையில் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து கிராம மக்கள் உடனடியாக தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்றும், தங்களுக்கு அவசர அவசியங்களுக்கு ரெயில்வே சுரங்கப்பாதையின் அருகில் ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்லும் வகையில் சிறிய பாதை ஏற்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் சுரங்க பாதையில் மேலும் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் லாந்தை மற்றும் கருங்குளம் பகுதி பொதுமக்கள் நேற்று காலை சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மதுரை–ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த கலெக்டர் வீரராகவ ராவ் உடனடியாக அங்கு சென்று கருங்குளம் பகுதி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மக்களின் அவதியை போக்கும் வகையில் உடனடியாக அந்த பகுதியில் மக்கள் சென்றுவர வசதியாக சிறிய பாதை அமைத்து தருவதாகவும், சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். கலெக்டரின் உத்தரவினை தொடர்ந்து சுரங்க பாதையின் அருகில் சிறிய நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.


Next Story