மகாளய அமாவாசை: கன்னியாகுமரியில் தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் குவிந்தனர்


மகாளய அமாவாசை: கன்னியாகுமரியில் தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் குவிந்தனர்
x
தினத்தந்தி 8 Oct 2018 10:45 PM GMT (Updated: 8 Oct 2018 9:37 PM GMT)

மகாளய அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரியில் தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் குவிந்தனர்.

கன்னியாகுமரி,

இந்துக்களின் முக்கிய நாட்களில் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையும் ஒன்று. இந்த நாளில் கடல், ஆறு போன்ற நீர்நிலைகளில் இந்துக்கள் அதிகாலையில் புனித நீராடி மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று கன்னியாகுமரியில் தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் குவிந்தனர்.

இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடற்கரையில் புனித நீராடினார்கள்.

பின்னர், கடற்கரையில் உள்ள வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் உச்சரிக்க முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அப்போது வேத விற்பனர்கள் கொடுத்த பொருட்களை கடலில் கரைத்தனர். பின்னர் மீண்டும் புனித நீராடினர். தொடர்ந்து, கடற்கரையில் உள்ள பரசுராம் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

அமாவாசையையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அம்மனுக்கு வைர கிரீடம், வைர மூக்குத்தி, தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டிருந்தன.

மதியம் அன்னதானம், மாலையில் சாயரட்ச பூஜை, இரவு அம்மன் பல்லக்கில் 3 முறை கோவிலை வலம் வருதல், வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு, தொடர்ந்து அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாராதனை நடந்தன.


Next Story