திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி: வகுப்புகளை புறக்கணித்து மாணவ-மாணவிகள் போராட்டம்


திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி: வகுப்புகளை புறக்கணித்து மாணவ-மாணவிகள் போராட்டம்
x
தினத்தந்தி 8 Oct 2018 11:00 PM GMT (Updated: 8 Oct 2018 10:14 PM GMT)

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லை. கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக நேற்று காலை மாணவ, மாணவிகள் கல்லூரி நுழைவுவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கலெக்டர் உத்தரவின் பேரில் உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், திருவண்ணாமலை உதவி கலெக்டர் தங்கவேலு மற்றும் போலீசார் கல்லூரிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு செல்லாமல் வீடுகளுக்கு சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story