வைகோ கைதுக்கு எதிர்ப்பு: ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
சென்னையில் நேற்று வைகோ கைது செய்யப்பட்டதற்கு சூலூர் ஒன்றிய ம.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சூலூர்,
நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபாலை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் காவல் துணை ஆணையர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று சென்னையில் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்த்து சூலூர் ஒன்றிய ம.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சூலூர் பழைய பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசும்போது, இந்த போராட்டம் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டு இருப்பதற்கான போராட்டம் இல்லை. மத்திய, மாநில அரசுக்கு எதிராக பேசினால் கைது செய்யப்படுவார்கள் என்ற ஜனநாயக படுகொலைக்கு எதிரான போராட்டம் ஆகும். நக்கீரன் கோபாலை வழக்கறிஞர் என்ற முறையில் சந்திக்க சென்ற வைகோவை கைது செய்து இருப்பது, இந்திய ஜன நாயகத்தின் குரல் வளையை நசுக்குவது போன்றதாகும் என்று கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கோபால கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.