தூத்துக்குடி கடலில் மீன்பிடிக்க சென்று மாயமான 19 மீனவர்கள் பத்திரமாக மீட்பு: இன்று கரை திரும்புகின்றனர்


தூத்துக்குடி கடலில் மீன்பிடிக்க சென்று மாயமான 19 மீனவர்கள் பத்திரமாக மீட்பு: இன்று கரை திரும்புகின்றனர்
x
தினத்தந்தி 10 Oct 2018 3:00 AM IST (Updated: 9 Oct 2018 11:06 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி கடலில் மீன்பிடிக்க சென்று மாயமான 19 மீனவர்கள் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர். இன்று அவர்கள் கரை திரும்புகின்றனர்.

தூத்துக்குடி, 


தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனால் தூத்துக்குடி பகுதி கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்த மீனவர்கள் அனைவரும் கரைக்கு திரும்ப மாவட்ட நிர்வாகம் மற்றும் கடலோர காவல்படை சார்பில் கடந்த 5-ந் தேதி அறிவுறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து மீன்பிடி படகுகளில் மீன்பிடிக்க சென்ற பெரும்பாலான மீனவர்கள் கரைக்கு திரும்பினர்.

அதேநேரத்தில் தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தை சேர்ந்த ரவி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் தருவைகுளத்தை சேர்ந்த மிக்கேல்ராஜ் (வயது 35), ஜெகன் (30), வசந்த் (21), திரேஸ்புரத்தை சேர்ந்த கில்பர்ட் (47), சாயல்குடியை சேர்ந்த ஜோசப் (23), ராமநாதபுரம் மாவட்டம் வெட்டுக்காட்டை சேர்ந்த குழந்தைராஜ் (50), வேம்பாரை சேர்ந்த ராஜ் (30), ராமர் (30), தாளமுத்துநகரை சேர்ந்த வல்லவன் (35), தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த டால்வின் ஆகிய 10 பேரும், பவுல்ராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் தருவைகுளத்தை சேர்ந்த விஜி (25), சுதாகர் (26), அந்தோணி (47), தாளமுத்துநகரை சேர்ந்த விக்கி (24), அன்சாரி (23), செல்வராஜ் (65), எபிஸ்டன் (22), கோவில்பட்டியை சேர்ந்த ஜோபின் (30), சவேரியார்புரத்தை சேர்ந்த செல்வம் (24) ஆகிய 9 மீனவர்களும் கடந்த 1-ந் தேதி தருவைகுளத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். அந்த 2 படகுகளை மட்டும் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது. இதனால் மாயமான அந்த மீனவர்களின் கதி என்ன? என தெரியாமல் இருந்தது.

இதனால் தூத்துக்குடி கடலோர காவல்படை கமாண்டர் வெங்கடேஷ் உத்தரவின்பேரில் மீனவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. கடலோர காவல்படையின் ரோந்து கப்பல்கள் மற்றும் டோனியர் வகை சிறிய விமானங்களும் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
இந்த நிலையில் 2 விசைப்படகுகளும் கன்னியாகுமரியில் இருந்து தெற்கு பகுதியில் சுமார் 105 கடல் மைல் தொலைவில் இந்திய எல்லைக்குள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக தூத்துக்குடி கடலோர காவல்படையின் அபிராஜ் ரோந்து கப்பல் மீனவர்கள் இருக்கும் பகுதிக்கு விரைந்து சென்றது. அங்கு 2 படகுகளில் இருந்த 19 மீனவர்களையும் கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.

அவர்கள் இன்று (புதன்கிழமை) கரைக்கு திரும்புவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதனால் மீனவர்களின் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story