வக்பு வாரிய சொத்து முறைகேடு: விசாரணை அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும் - மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


வக்பு வாரிய சொத்து முறைகேடு: விசாரணை அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும் - மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 11 Oct 2018 4:23 AM IST (Updated: 11 Oct 2018 4:23 AM IST)
t-max-icont-min-icon

வக்பு வாரிய சொத்து முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் சிறுபான்மை ஆணைய தலைவராக இருந்தவர் அன்வர் மணிப்பாடி. அவர் வக்பு வாரிய சொத்து முறைகேடு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தயாரித்து 2012-ம் ஆண்டு அரசிடம் வழங்கினார். இந்த அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்ய உத்தரவிட கோரி கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த 2016-ம் ஆண்டு, அந்த அறிக்கையை சட்ட சபையில் தாக்கல் செய்வதாக மாநில அரசு ஐகோர்ட்டில் தெரிவித்தது. இதையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த அறிக்கை சட்ட சபையில் தாக்கல் செய்யப்படவில்லை.

இதையடுத்து கர்நாடக ஐகோர்ட்டில் காந்தா என்பவர் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார் அதில், மாநில அரசு ஒப்புக்கொண்டது போல் அன்வர் மணிப்பாடி அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்றும், அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சிறுபான்மை நலத்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் இந்த வழக்கு நீதிபதிகள் ராகவேந்திர சவுகான், ஷாம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சிறுபான்மை நலத்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜரானார். அவர் கோர்ட்டில் பேசுகையில், “இந்த வழக்கில் ஒரு நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணையில் உள்ளது” என்றார்.

அதற்கு நீதிபதிகள், “2016-ம் ஆண்டு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தாலும், அதுபற்றி இன்னும் விசாரணை நடைபெறாதது ஏன். ஒரு நீதிபதி வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த முடியாவிட்டால், அதற்கு தடை ஆணை பெற்றிருக்க வேண்டும் அல்லது மறுஆய்வு மனுவை தாக்கல் செய்திருக்க வேண்டும்” என்றனர்.

அப்போது அரசு வக்கீல், மறுஆய்வு மனு 2 நீதிபதிகள் அமர்வில் விசாரணையில் உள்ளதாக தெரிவித்தார். மீண்டும் பேசிய நீதிபதிகள், ஒரு நீதிபதி அளித்த தீர்ப்பின்படி, வக்பு வாரிய சொத்து முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கையை 4 வாரங்களில் சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் மாநில அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று கூறினர். இந்த வழக்கின் அடுத்த விசாரணையை நவம்பர் மாதம் 12-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.


Next Story