நம்பியூர் பகுதி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


நம்பியூர் பகுதி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 14 Oct 2018 3:45 AM IST (Updated: 14 Oct 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

நம்பியூர் பகுதி கடைகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

நம்பியூர்,

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மளிகை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு நடத்தி தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்து வருகிறார்கள்.

நம்பியூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் 150–க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் உத்தரவின் பேரில், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் ஆர்.கணேசமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் நம்பியூர் பகுதியில் உள்ள 50–க்கும் மேற்பட்ட கடைகளில் அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டார்கள்.

இந்த சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர் போன்றவை கடைகளில் விற்பனைக்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மொத்தம் 35 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் அதை விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். சில கடை உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.

இதேபோல் நம்பியூர் பகுதியில் தொற்று நோய்களை உண்டாக்கும் கொசுக்களை அழிக்கும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது மழைநீர் தேங்கிய பழைய டயர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள்.


Next Story