உளுந்தூர்பேட்டை: அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கட்சியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் - குமரகுரு எம்.எல்.ஏ. வேண்டுகோள்


உளுந்தூர்பேட்டை: அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கட்சியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் - குமரகுரு எம்.எல்.ஏ. வேண்டுகோள்
x
தினத்தந்தி 14 Oct 2018 4:30 AM IST (Updated: 14 Oct 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கட்சியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று குமரகுரு எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருக்கோவிலூர்,

விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான குமரகுரு நேற்று தினத்தந்தி நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அ.தி.மு.க. என்ற மகத்தான இயக்கம் தமிழகத்தின் கேடயமாக இன்று வரை செயல்பட்டு மக்களை பாதுகாத்து வருகிறது. அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோர் வழியில் ஆட்சி செய்து அ.தி.மு.க.வை இந்திய அளவில் மிகப்பெரும் சக்தியாக உருவாக்கி காட்டினார் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா.

மேலும் அவர் இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் தமிழகத்தை ஆளும் என சூளுரைத்தார். அவரது எண்ணம், லட்சியம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் சீரிய தலைமையில் அ.தி.மு.க. அரசு வெற்றி நடைபோட்டு வருகின்றது.

தற்போது அ.தி.மு.க. 47-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு விழுப்புரம் தெற்கு மாவட்டம் சார்பில் வருகிற 17-ந்தேதி (புதன்கிழமை) உளுந்தூர்பேட்டையில் அமைச்சர் சி.வி.சண்முகம் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின்படி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

எனவே ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், தமிழகத்தை தொடர்ந்து முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லவும் அயராது பாடுபட்டு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு என்றும் எங்கள் ஆதரவு உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழுப்புரம் தெற்கு மாவட்டம் என்றுமே அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும்.

விழாவுக்கான ஏற்பாடுகளை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகிறார்கள் என்று குமரகுரு எம்.எல்.ஏ. கூறினார்.



Next Story