திருச்சுழி அருகே முகம் சிதைக்கப்பட்டு முதியவர் கொலை; யார் அவர்? போலீசார் விசாரணை
திருச்சுழி அருகே முகம் சிதைக்கப்பட்ட நிலையில் முதியவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
திருச்சுழி,
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே இலுப்பையூர் சீலம்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே காட்டுப் பகுதியில் முகம் சிதைந்த நிலையில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கதக்க ஆண் உடல் கிடந்தது. அந்த வழியாக வயலுக்கு வேலைக்கு சென்ற வர்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து திருச்சுழி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
திருச்சுழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். முகம் சிதைக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் அடையாளம் காணமுடியாமல் கிடந்த உடலை பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையுண்ட நபர் யார், எந்த ஊரைச்சேர்ந்தவர், கொலைக்கான காரணம் என்ன என்று விசாரித்து வருகின்றனர். துப்புத்துலக்க மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடவியல் நிபுனர்கள் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர். அக்கம்பக்கத்தில் இருந்து ஏராளமானோர் அங்கு வந்து உடலை பார்த்தனர். எனினும் அவர் யார் என்பது தெரியவில்லை. எனவே வெளியூரில் இருந்து அழைத்து வந்து கொலைசெய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.