கொலை வழக்கில் கைதான 2 வாலிபர்களுக்கு ஜாமீன்: காந்தி மியூசியத்தில் வாரந்தோறும் ஆஜராகவும் ஐகோர்ட்டு உத்தரவு
சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
மதுரை,
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த கச்சநத்தம் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து பழையனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஏராளமானோரை கைது செய்தனர். இந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரசாந்த் என்ற அருண்பாண்டி (வயது 19), ரவி என்ற முகிலன் (19) ஆகிய 2 பேரும் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், நாங்கள் 90 நாட்களாக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளோம். எங்கள் மீதான வழக்கில் சிவகங்கை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. எனவே எங்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
அந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், “இந்த வழக்கில் 3 பேர் கொல்லப்பட்டது துரதிர்ஷ்ட சம்பவம். மனுதாரர்கள் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. எனவே அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்படுகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுரை காந்தி மியூசியத்தில் ஆஜராக வேண்டும். அங்கு காந்திய சிந்தனை நூல்களை வாசிக்க வேண்டும். சாட்சிகளை கலைக்கும் செயலில் ஈடுபடக்கூடாது. நிபந்தனைகளை மீறினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம்“ என்று நீதிபதி உத்தரவிட்டார்.