திருச்சி விமான நிலையத்தில் விபத்து நடந்த இடத்தை டெல்லி அதிகாரிகள் பார்வையிட்டனர்


திருச்சி விமான நிலையத்தில் விபத்து நடந்த இடத்தை டெல்லி அதிகாரிகள் பார்வையிட்டனர்
x
தினத்தந்தி 15 Oct 2018 10:45 PM GMT (Updated: 15 Oct 2018 9:53 PM GMT)

திருச்சி விமான நிலையத்தில் விபத்து நடந்த இடத்தை டெல்லியில் இருந்து வந்த அதிகாரிகள் பார்வையிட்டு, ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

செம்பட்டு,

திருச்சி விமான நிலையத்தில் இருந்து கடந்த 12-ந்தேதி அதிகாலை 1.15 மணிக்கு துபாய்க்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சுற்றுச்சுவர் மற்றும் விமானங்கள் இயக்கத்துக்கு வழிகாட்டும் ஆன்டெனா கருவிகள், கண்காணிப்பு கருவி, வழிகாட்டு விளக்குகள் மீது மோதிவிட்டு பறந்து சென்றது. இந்த விபத்தில் விமான நிலையத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததோடு, விமானத்தின் அடிப்பாகம் மற்றும் சக்கரங்களும் சேதம் அடைந்தன. இதனால் விமானம் துபாய்க்கு செல்வதற்கு முன்பாக மும்பையில் பத்திரமாக தரை இறக்கப்பட்டதால் அதில் பயணித்த 130 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

இந்த விபத்துக்கு விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமா, அல்லது விமானியின் கவனக்குறைவா? விமான நிலையத்தின் வான் கட்டுப்பாடு அறையில் இருந்து பிறப்பிக்கப்பட்ட கட்டளைகளில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டதா? என்பது பற்றி சென்னையில் இருந்து வந்திருந்த விமான நிலையங்களின் ஆணையக்குழும அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தினார்கள்.

இந்நிலையில் டெல்லியில் இருந்து உள்நாட்டு விமான போக்குவரத்து பொது இயக்குனரக அதிகாரிகள் 2 பேர் நேற்று காலை திருச்சிக்கு விமானத்தில் வந்தனர். அவர்கள் முதலில் ஓடுபாதையின் கடைசி பகுதியில் ஆய்வு செய்தனர். அதன் பின்னர் விமானம் மோதியதால் சேதம் அடைந்த ஆன்டெனா கருவிகள், சேதம் அடைந்த சுற்றுச்சுவர் மற்றும் உடைந்த வழிகாட்டு விளக்கு ஆகியவற்றை பார்வையிட்டனர். இதனைத்தொடர்ந்து கட்டுப்பாட்டு அறைக்கு சென்று சம்பவத்தின்போது பணியில் இருந்த ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினார்கள். விபத்து பற்றி விமானி கணேஷ் பாபுவிற்கு எவ்வளவு நேரத்தில் தகவல் கொடுக்கப்பட்டது என்பது உள்பட பல கேள்விகளை எழுப்பி இந்த விசாரணை நடைபெற்றது.

டெல்லி அதிகாரிகள் திருச்சிக்கு வந்து விசாரணை நடத்தியது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. மாலையில் அவர்கள் விசாரணை முடிந்து தனியார் விமானம் மூலம் சென்னைக்கு சென்று விட்டனர்.

Next Story