சபரிமலைக்கு செல்லமாட்டோம் என்று அகல் விளக்குகள் ஏந்தி பெண்கள் உறுதிமொழி ஏற்பு


சபரிமலைக்கு செல்லமாட்டோம் என்று அகல் விளக்குகள் ஏந்தி பெண்கள் உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 17 Oct 2018 4:15 AM IST (Updated: 17 Oct 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

சபரிமலைக்கு செல்லமாட்டோம் என்று அகல் விளக்குகள் ஏந்தி பெண்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

மயிலாடுதுறை,

சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 28-ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் தொடர்பாக வழங்கிய தீர்ப்பு தமிழகம் முழுவதும் விமர்சனத்துக்கும், கண்டனத்துக்கும் உள்ளாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 10 வயதில் இருந்து 50 வயதிற்கும் இடைப்பட்ட பெண்களும் சபரிமலை அய்யப்பனை 18-ம்படி வழியாக சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்ற தீர்ப்பு, தொன்றுதொட்டு பின்பற்றி வரும் பண்பாட்டையும், கலாசாரத்தையும் மீறும் செயல் என்று கூறி அய்யப்ப பக்தர்கள் தங்களது கண்டனங்களை பலவகையில் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து கேரள மாநில அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்யாததை கண்டித்தும் ஆன்மிகவாதிகள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறை காசிவிஸ்வநாதர் கோவிலில் உள்ள அய்யப்பன் சன்னதியில் குருசாமிகள் மற்றும் அய்யப்பபக்தர்கள் சார்பில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பிரபாகரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அங்கு கூடியிருந்த பெண்கள் கையில் அகல்விளக்கு ஏந்தி அய்யப்பனின் சரண கோஷமிட்டு கீழ்கண்டவாறு உறுதிமொழி எடுத்து கொண்டனர். அதில் தொன்றுதொட்டு பின்பற்றி வரும் பண்பாடு மற்றும் கலாசாரத்தை பாதுகாக்கவும், நித்யபிரம்மச்சாரி அய்யப்பனின் புனிதம் காக்கவும், விரதம் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஏராளமான அய்யப்ப பக்தர்களின் விரதத்தை காக்கவும், 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சபரிமலைக்கு செல்லமாட்டோம் என்று கையில் அகல் விளக்குகளை ஏந்தி உறுதிமொழி எடுத்தனர்.

நிகழ்ச்சியில் கோவில் மற்றும் மடங்கள் பாதுகாப்புக்குழுவின் மாநில தலைவர் அழகிரிசாமி, இந்துமக்கள் கட்சியின் மாநில செயலாளர் சாமிநாதன், முருகேசன், காசி.வெங்கடேசன், ரவி, ராமு, ஹரிஹரன் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story