நங்கநல்லூரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி; என்ஜினீயர் கைது
நங்கநல்லூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். கடன் தொல்லையால் கொள்ளையடிக்க முயன்றதாக போலீசாரிடம் அவர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த நங்கநல்லூர் எம்.ஜி.ஆர். சாலையில் கரூர் வைசியா வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. கடந்த 15–ந் தேதி அதிகாலையில் வாலிபர் ஒருவர், இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்தார்.
அவர், திடீரென ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து, அதில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தார். ஆனால் அவரால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் முயற்சி பலன் அளிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்று விட்டார்.
மறுநாள் ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க வந்தவர்கள், ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வங்கி அதிகாரிகள், ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்தனர்.
அதில் அந்த வாலிபர், ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்து எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபடும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து வங்கியின் உதவி மேலாளர் ஞானபிரபு, இதுபற்றி பழவந்தாங்கல் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவின்பேரில் பழவந்தாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து வாலிபரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் பழவந்தாங்கல் போலீஸ்காரர் சங்கர், போலீஸ் நண்பர் குழுவைச் சேர்ந்த அருண்பாண்டியன் ஆகியோர் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றிய வாலிபரை பிடித்து விசாரித்தனர். வங்கி ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில் இருந்த வாலிபரின் உருவமும், பிடிபட்ட வாலிபரின் உருவமும் ஒத்துப்போனதால் இதுபற்றி அவரிடம் விசாரித்தனர்.
அதில் அவர், பழவந்தாங்கல் பி.வி.நகரை சேர்ந்த செல்வமணி (வயது 27) என்பதும், அந்த வங்கி ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்து எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து செல்வமணியை போலீசார் கைது செய்தனர்.
போலீசாரிடம் செல்வமணி அளித்து உள்ள வாக்குமூலத்தில், ‘‘மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து உள்ள நான், மலேசியாவுக்கு வேலைக்கு சென்றேன். ஆனால் அங்கு சரியான சம்பளம் கிடைக்காததால் திரும்பி வந்து விட்டேன். சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். எனது மனைவி நர்சாக உள்ளார். கடன் தொல்லை அதிகமானதால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றேன்’’ என்று கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் கைதான என்ஜினீயர் செல்வமணியை ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற என்ஜினீயரை, பிடித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், போலீஸ்காரர் சங்கர், அருண்பாண்டியன் ஆகியோரை மாநகர போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.