ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுவிக்க கோரும் உண்ணாவிரதத்திற்கு ஐகோர்ட்டு அனுமதி
ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுவிக்க கோரும் உண்ணாவிரதத்திற்கு அனுமதி அளித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த திலீபன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ஏழு தமிழர் விடுதலைக்கான கூட்டமைப்பின் அமைப்பாளராக இருக்கிறேன். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும், கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுவிக்க கோரிய வழக்கில், தமிழக அரசே முடிவு எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அந்த 7 பேரையும் விடுதலை செய்ய, தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த தீர்மானம் கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் கவர்னர் எந்த முடிவும் எடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். எனவே தமிழக அரசின் முடிவிற்கு கவர்னர் விரைந்து ஒப்புதல் வழங்கக்கோரி எங்கள் அமைப்பின் சார்பில் அக்டோபர் 20–ந்தேதி தல்லாகுளம் தபால்தந்தி அலுவலகம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. தல்லாகுளம் பகுதியில் போராட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. வேண்டுமானால் கோரிப்பாளையம் பள்ளிவாசல் பகுதியில் அனுமதிக்கலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, கோரிப்பாளையம் பள்ளிவாசல் அருகில் உள்ள பகுதியில் போராட்டத்திற்கு அனுமதி கேட்டு மனுதாரர் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். அதனை தல்லாகுளம் போலீசார் பரிசீலித்து அனுமதி வழங்க வேண்டும். மேலும் போராட்டம் அமைதியான முறையில் நடக்க தேவையான நிபந்தனைகளை போலீசார் விதிக்கலாம் என உத்தரவிட்டார்.