சாலைகள் அமைப்பதில் முறைகேடு நடந்ததாக வழக்கு: சி.பி.ஐ. விசாரணையை எதிர்கொள்ள பயமா? எடப்பாடி பழனிசாமி பேட்டி


சாலைகள் அமைப்பதில் முறைகேடு நடந்ததாக வழக்கு: சி.பி.ஐ. விசாரணையை எதிர்கொள்ள பயமா? எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 22 Oct 2018 11:15 PM GMT (Updated: 22 Oct 2018 6:39 PM GMT)

சி.பி.ஐ. விசாரணையை எதிர்கொள்ள பயமா? என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

திருச்சி,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

பயமா?

கேள்வி:-சாலைகள் அமைப்பதில் முறைகேடு நடந்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்திருப்பதால், நீங்கள் வழக்கை எதிர்கொள்ள பயப்படுகிறீர்களா?.

பதில்:- உயர்ந்த பதவியில் இருப்பதனால், நியாயமாக, நேர்மையாக விசாரணை நடைபெற வேண்டும், அதனால், சி.பி.ஐ.யிடம் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள், ஆனால் அதில் எந்தவித குற்றமும் சொல்லவில்லையே. சாலை அமைப்பதில் எந்தவித முறைகேடும் சொல்லவில்லை. அதனால் தான், மேல்முறையீடு செய்யப்பட்டு இருக்கிறது.

கேள்வி:-தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் நாடாளுமன்றத்தேர்தல் பணிகளில் தீவிரமாக இருக்கிறார்கள். அ.தி.மு.க.வில் வேகம் இல்லை என்று கூறப்படுகிறதே?

பதில்:-நீங்கள் தான் இப்படி சொல்கிறீர்கள், நான் போகும் இடங்களில் வரும் மக்கள் செல்வாக்கைப் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.

தடுப்பணை

கேள்வி:-காவிரியில் தடுப்பணை கட்ட ஒரு குழு அமைக்கப்படுமென்று சொன்னீர்களே?

பதில்:-காவிரி நதிநீர் ஆங்காங்கே உபரியாக வருகின்ற காலகட்டத்தில் தடுப்பணை கட்டி அதை சேமிப்பதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தியிருக்கின்றோம். ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அவர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று, பருவகாலங்களில் பொழிகின்ற மழைநீர் வீணாகாமல் அந்தப் பகுதியிலே ஓடுகின்ற ஓடைகளிலே, நதிகளின் குறுக்கே தடுப்பணை கட்டி அதை சேமிக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்கான பணிகளை நான்கு மாதங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி:-திருச்சி முக்கொம்பு தடுப்பணைக்கு எப்பொழுது அடிக்கல் நாட்டுவீர்கள்?

பதில்:-இப்பொழுதுதான், விரிவான திட்ட அறிக்கை தயாரித்து கொண்டிருக்கிறேன். அது தயார் செய்யப்பட்ட பின்புதான், டெண்டர் விட்டு பிறகு அந்தப் பணி ஆரம்பிக்கப்படும்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம்

முன்னதாக நேற்று காலை 7.20 மணிக்கு திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய எடப்பாடி பழனிசாமி சென்றார். அங்கு அவருக்கு, கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் பட்டாச்சாரியார்கள் தங்கக்குடத்துடன் கூடிய பூரணகும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.அதைத்தொடர்ந்து ரெங்கா ரெங்கா கோபுரம் வழியாக எடப்பாடி பழனிசாமி கோவிலுக்குள் சென்றார். கோவில் பிரகாரத்தில் கோவில் யானை ஆண்டாள் அவரை ஆசீர்வாதம் செய்தது. யானைக்கு அவர் பழங்களை வழங்கினார். பின்னர் ஆரியப்பட்டாள் வாசல் வழியாக சென்று மூலவர் ரெங்கநாதர் சுவாமியை அவர் வழிபட்டார். தொடர்ந்து தாயார் சன்னதியில் ரெங்கநாச்சியாரை தரிசனம் செய்து விட்டு உபகோவிலான மேட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலுக்கு வந்தார். அங்கு சிறிது நேரம் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்.

பின்னர் அங்கிருந்து பேட்டரி காரில் பயணம் செய்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சக்கரத்தாழ்வார் சன்னதி மற்றும் ஆஞ்சநேயர், நரசிம்மர் சன்னதிகளை தரிசனம் செய்தார். தொடர்ந்து ராமானுஜர் சன்னதிக்கு சென்று வழிபட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டார். புறப்படும் முன்பு கோவில் நிர்வாகம் சார்பில் ரெங்கநாதர் கோவில் வரலாறு அடங்கிய புத்தகம் மற்றும் மூலவர் படம் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. இந்த தரிசன நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வேலுமணி, வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, எம்.பி.க்கள் குமார், ரத்தினவேல், திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி, முன்னாள் அமைச்சர் பூனாட்சி உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முதல்-அமைச்சர் வருகையையொட்டி, அங்கு போலீஸ் உதவி கமிஷனர் ராமச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சிவசுப்பிரமணியன், உமாசங்கர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story