கந்தர்வகோட்டை பகுதியில் 10-ம் நூற்றாண்டிற்கு முந்தைய சிலைகள் கண்டெடுப்பு


கந்தர்வகோட்டை பகுதியில் 10-ம் நூற்றாண்டிற்கு முந்தைய சிலைகள் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 22 Oct 2018 10:45 PM GMT (Updated: 22 Oct 2018 7:35 PM GMT)

கந்தர்வகோட்டை பகுதியில் 10-ம் நூற்றாண்டிற்கு முந்தைய சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

கந்தர்வகோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஆத்தங்கரைவிடுதி ஊராட்சிக்கு உட்பட்ட கீழ வாண்டான் விடுதியில், மிகச்சிறிய அளவிலான பத்மபிரபர் சிலை, சிவானார் என்ற பெயரில் வழிபாட்டில் உள்ள மகா வீரர் சிலை, சமண பள்ளி கட்டுமானமும் தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் மணிகண்டன், தலைவர் ராஜேந்திரன், ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டன் கூறுகையில், அக்னி ஆறு புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பெரிய குளத்தில் இருந்து 78 கிலோ மீட்டர் வரை பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது. இது அஞ்ஞான விமோச்சனி என அழைக்கப்பட்டு உள்ளது. அஞ்ஞானத்திற்குரிய இணையான சொல் அக்கியானி ஆகும். இச்சொல் மருவி அக்னி ஆறாக மாற்றம் பெற்றிருக்கும் என அனுமானிக்க முடிகிறது. சமண கொள்கையோடு ஆற்றின் பெயர் உள்ளதும், இவ்வாற்று படுகையில் உள்ள வாழமங்கலம், மங்கத்தேவன்பட்டி, மோசகுடி, கோவில் வீரக்குடி, செம்பாட்டூர், புத்தாம்பூர் உள்ளிட்ட ஊர்களில் சமண தடயங்கள் உள்ளதும், தற்போது கீழ வாண்டான்விடுதியில் சமண பள்ளி அடையாளப்படுத்தபட்டு இருப்பதும் புதிய வரலாற்று ஆய்வுகளுக்கு வழிவகுக்கும் என நம்பலாம்.

கீழ வாண்டான் விடுதி மற்றும் மேல வாண்டான் விடுதி எல்லையில் உள்ள அக்னி ஆற்றின் தென் புறமுள்ள சிவனார் திடலில் இந்த தொல்லியல் மேடு அமைந்து உள்ளது. இது முழுக்க முழுக்க செங்கல் மற்றும் களிமண் கொண்ட கட்டுமானமாக இருப்பதால் பத்தாம் நூற்றாண்டு கட்டுமானமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த சமண பள்ளி பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கைவிடப்பட்டு உள்ளது. சிவனார் என்ற பெயரில் வழிபாட்டிலுள்ள சிலை 5 அடி உயரம் 3 அடி அகலம் கொண்டதாக உள்ளது. இது சமண சமயத்தின் 24-வது தீர்த்தங்கரரான மகாவீரர் திருமேனி என அடையாளம் காணப்பட்டு உள்ளது. சிற்பத்தின் முக்கிய அடையாளமான சிங்க முத்திரை கட்டுமானத்தில் மறைந்து உள்ளது. சிலையின் காலம் பத்தாம் நூற்றாண்டிற்கு முந்தையதாக கணிக்க முடிகிறது.

மற்றொரு சிலை 17 சென்டி மீட்டர் உயரம் கொண்டதாகவும், தலை சிதைந்த நிலையில், தாமரை மேல் அமர்ந்த தியான நிலையில் உள்ளது. சிலையின் வலப்புறம் அமைந்து உள்ள இயக்கியர் சிற்பம் 3 சென்டி மீட்டர் அளவில் மிக நுணுக்கமாக மண்டியிட்டவாறு சாமரத்துடன் வடிவமைக்க பட்டுள்ளது. தாமரை மலரின் காம்பிலிருந்து இரண்டு புறமும் கீழ்ப்புறமாக சுருண்ட கொடி அமைப்புகள் காட்டப்பட்டு உள்ளது. இதில் மண்டியிட்டு கை கூப்பிய நிலையில் தனித்தனியாக 4 மனித உருவங்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. வேறெங்கும் இந்த வடிவிலான சிலை கண்டெடுக்கப்படவில்லை என்பதால் இதன் காலத்தை கணிக்க முடியவில்லை என்றார்.

Next Story