கவர்னர் மாளிகை மூலம் நிதி வசூலித்த ஆதாரங்களை மறைக்க முயற்சி - காங்கிரஸ் குற்றச்சாட்டு


கவர்னர் மாளிகை மூலம்  நிதி வசூலித்த ஆதாரங்களை மறைக்க முயற்சி - காங்கிரஸ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 23 Oct 2018 4:45 AM IST (Updated: 23 Oct 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

கவர்னர் மாளிகை மூலம் சமூக பொறுப்புணர்வு நிதி வசூலிக்கப்பட்டது தொடர்பான ஆதாரங்களை மறைக்க முயற்சி நடப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

புதுச்சேரி,

புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான முதல்–அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா அனந்தராமன் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:–

புதுவை தனியார் பள்ளி நிர்வாகியான ஜான்சன் என்பவர் கவர்னர் கிரண்பெடி முன்னிலையில் தாமாக முன்வந்து ஏரிகளை தூர்வாருவதாக கூறியுள்ளார். அவருக்கு தூர்வாரும் பணிக்கு அனுமதி அளித்தது யார்? அதற்கான திட்ட அறிக்கை தயாரித்தது யார்?

ஹவாலா ஊழல்போல் சமூக பொறுப்புணர்வு நிதியிலும் முறைகேடு நடக்கிறது. கவர்னர் மாளிகை சார்பில் தற்போது 11 இடங்களில் பணம் பெற்றுள்ளதாக தெரிகிறது. சமூக பொறுப்புணர்வு நிதி பெறுபவர்களின் பின்னணி தெரியாமல் பணம் பெறக்கூடாது என்பது விதி.

குறிப்பாக அரசு எதிர்பார்ப்பாளர்கள், வழக்கு இருப்பவர்களிடம் பணம் பெறக்கூடாது என்பதாகும். ஆனால் தனியார் மருத்துவக்கல்லூரிகள் மீது வழக்கு உள்ளது. சி.பி.ஐ. விசாரணையும் நடந்து வருகிறது. அவர்களிடம் நிதி பெற்று வாய்க்கால்களை தூர்வாருவதா?

சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் பணிகள் செய்யப்பட்டால் அதற்கு திட்ட அறிக்கை வேண்டும். தனிநபரிடம் நியமன அடிப்படையில் பணிகளை கொடுக்கக்கூடாது. லட்சக்கணக்கான மதிப்புள்ள பணிகளை காண்டிராக்ட் கொடுக்க முடிவு செய்தது யார்?

சுகாதாரத்துறை மூலம் தனியார் மருத்துவக்கல்லூரிகள் மீது கவர்னர் வழக்கு போடுகிறார். பின்னர் அவர்களிடம் நிதி பெற்று பொதுப்பணித்துறையை விட்டு பணிகளை செய்ய சொல்கிறார். சமூக பொறுப்புணர்வு நிதியை அதற்கென உருவாக்கப்பட்டுள்ள கமிட்டியிடம் கொடுத்து பணிகளை செய்ய சொல்வதில் என்ன பிரச்சினை? கமிட்டிக்கு தெரியாமல் பணிகளை செய்யவேண்டிய அவசியம் என்ன?

கவர்னரின் செயல்பாடுகள் தொடர்பாக மத்திய அரசு உடனடியாக நீதி விசாரணை அல்லது சி.பி.ஐ. விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் கவர்னர் மாளிகையில் நடந்த விழாக்களுக்கு செலவிட்டது தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும்.

தனியார் மருத்துவக்கல்லூரி, பள்ளி நிர்வாகிகள், தொழிலதிபர்களிடம் போன் மூலம் மிரட்டி பணம் பெறப்பட்டுள்ளது. இப்போது கவர்னர் மாளிகை சார்பில் அதிகாரத்தை பயன்படுத்தி அதற்கான ஆதாரங்களை மறைக்க முயற்சி நடக்கிறது. எங்களுக்கு தெரிந்தவரை கவர்னர் மாளிகை சார்பில் ரூ.3 கோடிக்கு மேல் வசூல் செய்யப்பட்டுள்ளது. அந்த பணம் எங்கு போனது?

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story