ஒட்டன்சத்திரம் அருகே பரபரப்பு: ஓடும் பஸ்சில் தீ - டிரைவர் உயிர் தப்பினார்


ஒட்டன்சத்திரம் அருகே பரபரப்பு: ஓடும் பஸ்சில் தீ - டிரைவர் உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 23 Oct 2018 9:30 PM GMT (Updated: 23 Oct 2018 5:37 PM GMT)

ஒட்டன்சத்திரம் அருகே, ஓடும் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்து நாசமானது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ஒட்டன்சத்திரம், 

தூத்துக்குடியில் இருந்து திருமண கோஷ்டியினரை ஏற்றிக்கொண்டு ஆம்னி பஸ் ஒன்று கோவை நோக்கி சென்றது. பின்னர் அவர்களை இறக்கிவிட்டு விட்டு மீண்டும் தூத்துக்குடி நோக்கி பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை, நெல்லை மாவட்டம் தென்காசியை சேர்ந்த பாலசுப்பிரமணி (வயது 50) என்பவர் ஓட்டினார். பஸ்சில் வேறு யாரும் இல்லை.

நேற்று முன்தினம் மதியம் 12 மணி அளவில் தாராபுரம்-ஒட்டன்சத்திரம் ரோட்டில் கள்ளிமந்தையம் அப்பியப்பட்டி நால்ரோடு பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ்சின் பின்பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் பஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனை பின்னால் காரில் வந்த டிரைவர் ஒருவர் பார்த்தார்.

இதைத்தொடர்ந்து பஸ்சை முந்தி சென்று பாலசுப்பிரமணிக்கு கார் டிரைவர் தகவல் தெரிவித்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பாலசுப்பிரமணி, உடனடியாக பஸ்சை சாலையோரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அவர் வெளியேறிய சிறிது நேரத்தில் பஸ் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனால் அப்பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாராபுரம், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் இறங்கினர். ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இருந்தபோதிலும் பஸ் முற்றிலும் எரிந்து நாசமானது.

டிரைவர் முன்கூட்டியே கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். டீசல் டேங்கில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கள்ளிமந்தையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story