கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது; ½ கிலோ கஞ்சா, ரூ.25 ஆயிரம் பறிமுதல்


கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது; ½ கிலோ கஞ்சா, ரூ.25 ஆயிரம் பறிமுதல்
x
தினத்தந்தி 26 Oct 2018 10:15 PM GMT (Updated: 26 Oct 2018 8:34 PM GMT)

தவளக்குப்பத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கடலூரை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

பாகூர்,

தவளக்குப்பம்– நல்லவாடு செல்லும் ரோட்டில் ரகசியமாக கல்லூரி மாணவர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தவளக்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்–இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் நேற்று அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அந்த 2 வாலிபர்களும் போலீசாரைக் கண்டதும் அங்கிருந்து செல்ல முயன்றனர்.

உடனே போலீசார் அந்த 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் போலீசார் சோதனை செய்தபோது அவர்களின் சட்டைப் பாக்கெட்டுகளில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. மொத்தம் 505 கிராம் கஞ்சாவை சிறு சிறு பொட்டலங்களாக அவர்கள் வைத்திருந்தனர். மேலும் ரூபாய் 25 ஆயிரமும் வைத்திருந்தனர்.

அதைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் இந்திரா நகரைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் மகன் முனீஷ் என்ற முனுசாமி (வயது 23) மற்றும் கடலூர் வில்வநகர் பாப்பாந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை மகன் செல்வம் என்ற நாய்க்குட்டி (33) என்பதும் தெரிய வந்தது. இவர்கள் இருவரும் கல்லூரி மாணவர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து முனுசாமி மற்றும் செல்வத்தை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் 25 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

கஞ்சா விற்றவர்களை கைது செய்த போலீசாரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா, போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் ஆகியோர் பாராட்டினார்கள்.


Next Story