வன ஊழியரை கொன்ற காட்டு யானை குடியிருப்புக்குள் புகுந்து மீண்டும் அட்டகாசம்


வன ஊழியரை கொன்ற காட்டு யானை குடியிருப்புக்குள் புகுந்து மீண்டும் அட்டகாசம்
x
தினத்தந்தி 28 Oct 2018 4:00 AM IST (Updated: 28 Oct 2018 3:39 AM IST)
t-max-icont-min-icon

வன ஊழியரை கொன்ற காட்டு யானை மீண்டும் குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

துடியலூர்,

கோவையை துடியலூர் அருகே உள்ள பொன்னுத்துமலை அனுவாவி சுப்பிரமணிய சாமி கோவில் மருதமலை இந்த மலைப்பகுதிகளில் காட்டுயானை, காட்டுபன்றி, மான் உள்பட பல்வேறு வனவிங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அடிக்கடி அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் விவசாய விளை நிலங்களில் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள கரும்பு, வாழை, தென்னை உள்பட பல்வேறு பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்துகிறது.

இதில் கடந்த சில மாதங்களாக வரப்பாளையம், பன்னிமடை, பாப்பநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் காட்டுயானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரப்பாளையம் பகுதியில் அட்டகாசம் செய்த காட்டுயானையை வேட்டை தடுப்பு காவலர் வெங்கடேசன் விரட்ட முயன்றார். அப்போது அந்த காட்டு யானை அவரை மிதித்து கொன்றது.

அந்த காட்டு யானை மீண்டும் நேற்று முன்தினம் தாளியூர் ராஜகோபால் தோட்டம் என்ற பகுதியில் சக்திவேல் என்பவரின் தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அங்குள்ள வீட்டில் வைத்திருந்த மாட்டு தீவனங்களை காட்டு யானை தின்றும், தரையில் வீசியும் நாசம் செய்தது. மேலும் தோட்டத்தின் சுற்று சுவரையும் இடித்து தள்ளியது.

இதைப்பார்த்த தோட்ட உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து யானையை அங்கிருந்து விரட்டினர். மேலும் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் காட்டுயானையை நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் விரட் டினர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, தொடர்ந்து காட்டு யானைகள் தொந்தரவு செய்வதால் இரவு நேரங்களில் வெளிவர முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். இதனால் யானை-மனித மோதல் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே இந்த காட்டு யானையை பிடித்து சாடிவயல் முகாம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.



Next Story