டிரைவர் கொலை வழக்கில் நண்பர் கைது தரக்குறைவாக திட்டியதால் கொன்றதாக வாக்குமூலம்
புதுவையில் டெம்போ டிரைவர் கொலை வழக்கில் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி,
புதுவை காந்தி திருநல்லூர் சோழன் வீதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் சந்துரு (வயது 28), டெம்போ டிரைவர். இவர் கடந்த 28–ந் தேதி அப்பகுதியில் உள்ள காலி மனையில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கோரிமேடு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
சம்பவத்தன்று சந்துரு அவருடைய நண்பரான சொக்கநாதன்பேட்டையை சேர்ந்த டிரைவர் சங்கர் என்கிற சங்கர்ராஜா (31) என்பவருடன் சேர்ந்து வெளியே சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் மேட்டுப்பாளையம் சந்திப்பு பகுதியில் பதுங்கி இருந்த சங்கரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று தீவிரமாக விசாரித்தனனர். இதில் சந்துருவை தான் கொலை செய்ததாக சங்கர் ஒப்புக்கொண்டார். அதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
போலீசில் சங்கர் அளித்த வாக்குமூலம் வருமாறு:–
சந்துருவும் நானும் நண்பர்கள். நாங்கள் ஒன்றாக மது குடிப்பது வழக்கம். சம்பவத்தன்று சந்துருவும், நானும் ஒன்றாக மது அருந்தினோம். அப்போது சந்துரு என்னை மிகவும் தரக்குறைவாக திட்டினார். இதனால் எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் அருகில் கிடந்த கல்லால் சந்துருவை தாக்கினேன். மேலும் மது பாட்டிலாலும் குத்தினேன். இதில் அவர் பேச்சு மூச்சின்றி கிடந்தார். விபத்தில் சிக்கி சந்துரு இறந்து கிடந்ததுபோல் போலீசை நம்ப வைக்க பிணத்தின் மீது சேற்றை பூசினேன். ஆனால் போலீசார் என்னை கண்டுபிடித்துவிட்டனர்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.