அ.தி.மு.க. நிர்வாகிகளை போலீசார் தாக்கியதாக கூறி திருப்பூரில் போலீஸ் நிலையம் முற்றுகை
அ.தி.மு.க. நிர்வாகிகளை போலீசார் தாக்கியதாக கூறி திருப்பூரில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் கே.வி.ஆர்.நகர் அய்யன்நகரை சேர்ந்தவர் வேலுசாமி(வயது 52). பனியன் பிரிண்டிங் பட்டறை வைத்துள்ளார். இவருக்கும், அவருடைய உறவினரான முனியாண்டிக்கும்(55) இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து முனியாண்டி திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு வேலுசாமி மீது புகார் கொடுத்துள்ளார்.
புகாரை பெற்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மனோகரன், வேலுசாமியை செல்போனில் தொடர்பு கொண்டு போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்துள்ளார். அப்போது வேலுசாமி தகாத வார்த்தையில் செல்போனில் போலீசாரிடம் பேசியதாக தெரிகிறது. பின்னர் சிறிது நேரம் கழித்து வேலுசாமியும், அவருடைய உறவினரான ராதாகிருஷ்ணன்(48) ஆகியோரும் மத்திய போலீஸ் நிலையத்துக்கு சென்றுள்ளனர்.
பின்னர் புகார் தொடர்பாக விசாரணை நடந்துள்ளது. போலீஸ் என்று தெரியாமல் செல்போனில் பேசிவிட்டதாக வேலுசாமி கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து முனியாண்டியின் புகார் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலைராம் சக்திவேல் முன்னிலையில் பேசி முடிக்கப்பட்டு வேலுசாமி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆவார்கள்.
இந்தநிலையில் போலீஸ் நிலையத்துக்கு சென்ற தங்களை போலீசார் கடுமையாக தாக்கியதாக வேலுசாமி, ராதாகிருஷ்ணன் கூறியதை தொடர்ந்து அவர்களுடைய உறவினர்கள் நேற்று காலை 10½ மணி அளவில் திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவம் பற்றி அறிந்ததும் போலீஸ் உதவி கமிஷனர் அண்ணாத்துரை மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மேலும் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.குணசேகரன் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளும் போலீஸ் நிலையம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். வேலுசாமி, ராதாகிருஷ்ணன் தவறாக பேசியிருந்தால் வழக்குப்பதிவு செய்வதை விட்டு போலீசார் தாக்கியது கண்டிக்கத்தக்கது. எனவே சப்–இன்ஸ்பெக்டர் மனோகரன், ஏட்டு கோவிந்தராஜ் ஆகியோர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் போலீஸ் உதவி கமிஷனரிடம் தெரிவித்தார்கள்.
இதைத்தொடர்ந்து சப்–இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோர் உடனடியாக திருப்பூர் மாநகர துணை கமிஷனர் அலுவலகத்துக்கு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்கள்.