சென்னை விமான நிலையத்தில் வருமான வரி அதிகாரியுடன் தகராறு செய்த வாலிபர் கைது


சென்னை விமான நிலையத்தில் வருமான வரி அதிகாரியுடன் தகராறு செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 31 Oct 2018 10:15 PM GMT (Updated: 31 Oct 2018 8:11 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் வருமான வரித்துறை அதிகாரியுடன் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரம் வழியாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் சென்னையை அடுத்த பல்லாவரத்தை சேர்ந்த சாகுல்அமீது (வயது 29) என்பவர் வந்தார்.

அவரது உடைமைகளை சோதனை செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரிடம் 900 கிராம் எடைகொண்ட தங்க வளையல்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதுபற்றி அவரிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, திருவனந்தபுரத்தில் அந்த தங்க வளையல்களுக்கான வரியை செலுத்திவிட்டேன் என கூறினார்.

இதனால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் இதுபற்றி வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனே வருமான வரித்துறை உதவி அதிகாரி ஆன்டோ ரஞ்சித் அங்கு வந்து சாகுல்அமீதை விசாரணைக்காக அழைத்துச்சென்றார்.

மீனம்பாக்கம் உள்நாட்டு முனையம் அருகே வந்தபோது திடீரென சாகுல்அமீது வருமான வரித்துறை அதிகாரி ஆன்டோ ரஞ்சித்துடன் தகராறில் ஈடுபட்டார். இதைக்கண்ட விமான நிலைய போலீசார் இருவரையும் விமான நிலைய போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.

அப்போது வருமான வரி அதிகாரி ஆன்டோ ரஞ்சித், தன்னை பணி செய்யவிடாமல் தடுத்ததாக சாகுல்அமீது மீது போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாகுல்அமீதை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story