மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது


மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது
x
தினத்தந்தி 31 Oct 2018 11:45 PM GMT (Updated: 31 Oct 2018 10:51 PM GMT)

ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டார்.

ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தெற்கு தேவதானம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கிலி மாடன். இவரது மகன் ராம்குமார் (வயது 27). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியில் புதிதாக கட்டிய வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்காக தளவாய்புரம் மின் வாரிய அலுவலகத்திற்கு சென்றார்.

அங்கு உதவி செயற்பொறியாளராக வேலைபார்த்த ராஜபாளையத்தை சேர்ந்த பால்பாண்டியை சந்தித்து மின் இணைப்பு வழங்க விண்ணப்பம் அளித்தார். அப்போது மின்இணைப்பு வழங்க வேண்டும் எனில் ரூ.3 ஆயிரம் தர வேண்டும் என பால்பாண்டி கேட்டுள்ளார். இதைதொடர்ந்து ராம்குமார் அந்த பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் அதன்பிறகும் ராம்குமார் வீட்டுக்கு மின் இணைப்பு நீண்டநாட்களாக வழங்கப்படவில்லை.

இதனால் ஏமாற்றம் அடைந்த ராம்குமார் இதுபற்றி பால்பாண்டியிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் மேலும் ரூ.1000 தருவதாக இருந்தால் மின் இணைப்பு கொடுப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் பணம் கொடுக்க விருப்பம் இல்லாத ராம்குமார் இதுபற்றி விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதைதொடர்ந்து போலீசாரின் ஆலோசனைப்படி நேற்று மதியம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை உதவி செயற்பொறியாளர் பால்பாண்டியிடம் வழங்கினார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், விமலா மற்றும் போலீசார் சுற்றிவளைத்து பால்பாண்டியை கையும், களவுமாக கைது செய்தனர்.


Next Story