ஆபாச நடிகை சன்னி லியோன் நடிக்கும் வீரமாதேவி படத்துக்கு தடை கேட்ட மனு தள்ளுபடி
ஆபாச நடிகை சன்னிலியோன் நடித்துவரும் வீரமாதேவி படத்துக்கு தடை கேட்ட மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
மதுரை செல்லூரை சேர்ந்த சரவணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
தஞ்சையை மையமாக கொண்டு ஆட்சி புரிந்த முதலாவது ராஜேந்திரசோழனின் மனைவி ராணி வீரமாதேவி. அவரது வரலாற்றை சித்தரிக்கும் வகையில் ‘வீரமாதேவி‘ என்ற பெயரில் சினிமாப்படம் தயாரிக்கப்பட்டு விரைவில் வெளி வர உள்ளது. இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
வீரமாதேவி கதாபாத்திரத்தில் பிரபல ஆபாச நடிகை சன்னிலியோன் நடித்துள்ளார். இணையதளத்தில் அவரது ஆபாச படங்கள் உள்ளன. வீரமாதேவியாக அவர் நடிப்பது வீரமாதேவியை அவமானப்படுத்துவதாகும்.
முதலாம் ராஜேந்திரசோழனுக்கும், அவரது மனைவி வீரமாதேவிக்கும் தமிழகத்தில் பல இடங்களில் கோவில்கள் கட்டி பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.
வீரமாதேவி படத்தில் சன்னிலியோன் நடிப்பதற்கு எதிராக கர்நாடகத்தில் போராட்டம் நடத்தப்படுகிறது. அங்கு பலர் போலீசில் புகார் செய்துள்ளனர். இந்த புகாரின்பேரில் போலீசார் சன்னிலியோன் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். எனவே சன்னிலியோனை வீரமாதேவி படத்தில் இருந்து நீக்கவும், அதுவரை படப்பிடிப்பை நிறுத்தி, படத்தை வெளியிட தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை பொதுநல வழக்காக ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்று மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.