கல்லூரி, கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்: கால்வாயில் குப்பைகளை வீசினால் கடும் நடவடிக்கை - மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை


கல்லூரி, கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்: கால்வாயில் குப்பைகளை வீசினால் கடும் நடவடிக்கை - மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 3 Nov 2018 11:15 PM GMT (Updated: 3 Nov 2018 9:31 PM GMT)

கால்வாயில் குப்பைகளை வீசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்தார்.

வேலூர்,

டெங்கு கொசுப்புழு உற்பத்திக்கு காரணமாக இருந்த கல்லூரி, கடைகளுக்கு ரூ.19 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டது. கால்வாயில் குப்பைகளை வீசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்தார்.

வேலூர் மாவட்டத்தில் டெங்கு, பன்றி காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் அனைத்து மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், நகர்புற மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களிலும் டெங்கு மற்றும் காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அளிக்க தனியாக சிறப்பு சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும், மாநகராட்சி அதிகாரிகளும் டெங்கு கொசுப்புழுக்களை அழிக்க வீடு, வீடாக சென்று சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு சோதனையின் போது டெங்கு கொசுப்புழு கண்டறியப்பட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி மாநகராட்சி 1-வது மண்டலம் காட்பாடி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கல்லூரி வளாகத்தில் அப்புறப்படுத்தப்படாத குப்பையில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தி ஆகி இருந்தது. அக்கல்லூரிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இதையடுத்து அங்குள்ள ஒரு ஓட்டலில் சோதனை செய்தபோது அங்குள்ள தண்ணீர் தொட்டியில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகி இருந்தது. எனவே அந்த ஓட்டலுக்கும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

2-வது மண்டல அதிகாரிகள் பாபுராவ்தெருவில் சோதனை செய்தபோது வீடுகள் மற்றும் கடைகளில் சேரும் குப்பைகளை சாலையில் சிலர் வீசினர். குப்பைகளை சாலையில் வீசிய 15 பேர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு ரூ.7 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல 3-வது மண்டலத்தில் ஒரு வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்தபோது பூந்தொட்டியில் தண்ணீர் தேங்கி காணப்பட்டு, அதில் டெங்கு கொசுப்புழு உற்பத்தி ஆகி இருந்தது. எனவே அந்த வீட்டிற்கும், 4-வது மண்டலம் மாங்காய் மண்டி அருகே உள்ள ஒரு லாரி பழுதுபார்க்கும் நிலையத்தில் டெங்கு கொசுப்புழு காணப்பட்டதால் அந்த லாரி பழுதுபார்க்கும் நிலையத்துக்கும் தலா ரூ. ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மாவட்ட கலெக்டர் ராமன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரேஷ், மாநகராட்சி உதவி கமிஷனர் மதிவாணன் மற்றும் அதிகாரிகள் வேலூர் தீயணைப்பு நிலையம், நூலகம் போன்ற இடங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் விஜயகுமார் கூறுகையில், பெரும்பாலானவர்கள் சாலைகளில் குப்பைகளை வீசி செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பலர் கால்வாயில் வீசுவதால் கழிவுநீர் அடைப்பு ஏற்படுகிறது. இவ்வாறு குப்பைகளை வீசுவதால் அதன் மூலம் டெங்கு கொசுப்புழு உற்பத்தி ஆகிறது. கால்வாயில் குப்பைகளை வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story