ஓசூர் பகுதியில் கருகும் ரோஜா செடிகள் - விவசாயிகள் கவலை


ஓசூர் பகுதியில் கருகும் ரோஜா செடிகள் - விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 4 Nov 2018 11:00 PM GMT (Updated: 4 Nov 2018 9:38 PM GMT)

ஓசூர் பகுதியில் ரோஜா செடிகள் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், பேரிகை, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், தளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், சுமார் 400 ஹெக்டேர் பரப்பளவில் ரோஜா மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அதிகளவில் ரோஜா மலர் சாகுபடியாளர்கள், திறந்த வெளி மட்டுமின்றி, பசுமைக் குடில்களை அமைத்தும் சாகுபடி செய்து வருகிறார்கள்.

ஓசூர் பகுதி ரோஜா மலர்களுக்கு வெளிநாடுகளில் அதிக மவுசு உள்ளது. ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் காதலர் தினம் உள்ளிட்ட முக்கிய விழாக்களை கொண்டாட, ஓசூர் பகுதியிலிருந்து ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. காதலர் தின கொண்டாட்டத்திற்கு மட்டும், ஆண்டுதோறும் 50 லட்சம் முதல் 1 கோடி வரை விதவிதமான ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஓசூர் பகுதியில் விளைவிக்கப்பட்டுள்ள ரோஜா செடிகளை, மழைக் கால நோய் தாக்கி வருவதால் ரோஜா மலர்கள் செடிகளிலே கருகி வருகின்றன. இதனால் சந்தையில் ரோஜா மலர்களுக்கு நல்ல விலை இருந்தும், உற்பத்தி இல்லாததால், விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

இந்த நோய் தாக்குதலால், முதலில் ரோஜா செடிகளில் உள்ள இலைகள் கருகி உதிர்கிறது, பின்னர் மலர்களின் மொட்டுக்கள் மற்றும் மலர்கள் அனைத்தும் கருகி கீழே விழுகின்றன. இந்த நோயால், ரோஜா மலர்களின் தரம் பாதிக்கப்பட்டு, அதன் உற்பத்தியிலும் கடும் சரிவு ஏற்பட்டு வருகிறது. ஆனபோதிலும், மலர் சாகுபடியாளர்கள், ரோஜா செடிகளில் ஏற்பட்டுள்ள நோயை கட்டுப்படுத்த தேவையான மருந்துகளை தெளித்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ள செடிகளில் இலைகள் மற்றும் மலர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

இந்த மழைக்கால நோயினால், வருகிற கிருஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு, காதலர் தினம் ஆகிய கொண்டாட்டங்களுக்கு தேவையான ரோஜா மலர்கள், ஓசூர் பகுதியிலிருந்து உற்பத்தி செய்ய முடியுமா? என்ற சந்தேகம், ரோஜா மலர் சாகுபடியாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.


Next Story