முள்ளிப்பாடி உள்ளிட்ட ஏரிகள் தூர்வாரப்படும் கலெக்டர் தகவல்


முள்ளிப்பாடி உள்ளிட்ட ஏரிகள் தூர்வாரப்படும் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 8 Nov 2018 10:45 PM GMT (Updated: 8 Nov 2018 8:57 PM GMT)

முள்ளிப்பாடி உள்ளிட்ட ஏரிகள் தூர்வாரப்படும் என்று கலெக்டர் கூறினார்.

முசிறி,

திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி முசிறி தாலுகா அலுவலகத்திற்கு நேற்று நேரில் வருகை தந்தார். அப்போது முசிறி கோட்டத்தில் வருவாய்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், மணல் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். முசிறி பேரூராட்சி பகுதியில் சுகாதார பணிகளை ஆய்வு மேற்கொண்ட அவர், பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருமாறு பேரூராட்சி செயல் அலுவலர் தேவதாசிடம் கூறினார்.

பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டுமனை பட்டா 15 பேருக்கும், முதியோர் உதவித் தொகைக் கான ஆணை 5 பேருக்கும் கலெக்டர் வழங்கினார்.

அப்போது தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் முசிறி பகுதியை சேர்ந்த விவசாயிகள் வாய்க்கால்களை தூர்வாரவும், பாசன வாய்க்கால்களின் தலைப்பை மாயனூருக்கு மாற்றி அமைக்கவும் கலெக்டரிடம் வலியுறுத்தினர். அப்போது முள்ளிப்பாடி, திருத்தியமலை, சித்தாம்பூர் ஆகிய ஏரிகளில் பொதுப்பணித்துறை மூலமாக தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் விவசாயிகளிடம் தெரிவித்தார்.

தண்டலைப்புத்தூர் முதல் திண்ணக்ககோணம் வரை நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் மூலம் ஐயாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டு வரும் உயர்மட்ட பாலம் மற்றும் தார்ச்சாலை அமைக்கும் பணியையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

பின்னர் முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாகவும் ஆய்வு நடத்தினார். முசிறி கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், தாசில்தார் சுப்ரமணியன், ஒன்றிய ஆணையர்கள், பொறியாளர்கள் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர். முன்னதாக முசிறியில் வாடகை கட்டிடத்தில் அரசு பொது நூலக கட்டிடம் செயல்பட்டு வருவதால் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக புதிய கட்டிடம் அமைந்துள்ள இடத்தின் அருகே உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை மாவட்ட கலெக்டர் ராஜாமணி பார்வையிட்டு, அந்த இடத்தில் புதிய நூலகம் கட்டுவதற்காக தேர்வு செய்யுமாறு அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

Next Story