தீபாவளியையொட்டி கூடுதல் கட்டணம் வசூலித்த 166 ஆம்னி பஸ்கள் மீது வழக்கு - ரூ.4 லட்சம் அபராதம் வசூல்


தீபாவளியையொட்டி கூடுதல் கட்டணம் வசூலித்த 166 ஆம்னி பஸ்கள் மீது வழக்கு - ரூ.4 லட்சம் அபராதம் வசூல்
x
தினத்தந்தி 9 Nov 2018 3:46 AM IST (Updated: 9 Nov 2018 3:46 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளியையொட்டி கூடுதல் கட்டணம் வசூலித்த 166 ஆம்னி பஸ்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.4 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

வேலூர்,

தீபாவளியையொட்டி வேலூர், கிருஷ்ணகிரி மாவட்ட சுங்கச்சாவடிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடத்திய சோதனையில் கூடுதல் கட்டணம் வசூலித்த 166 ஆம்னி பஸ்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டது.

தீபாவளி பண்டிகையை கொண்டாட வெளியூரில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்றனர். அதனால் ரெயில், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலானோர் பஸ்சில் பயணம் மேற்கொண்டனர். அதனால் அரசு, தனியார் பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தடுக்க தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போக்குவரத்து அதிகாரிகள் சோதனைச் செய்தனர்.

அதன்படி வேலூர் சரக போக்குவரத்துத் துணை ஆணையர் செந்தில்நாதன் மேற்பார்வையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ராமகிருஷ்ணன் (வேலூர்), பார்த்தப்பசாமி (ராணிப்பேட்டை), அசோகன் (ஓசூர்) ஆகியோர் தலைமையில் போக்குவரத்து ஆய்வாளர்கள் ராஜசேகர், வெங்கட்ராகவன் உள்பட குழுவினர் வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகொண்டா, வாலாஜா, கிருஷ்ணகிரி ஆகிய சுங்கச்சாவடிகளில் கடந்த 2-ந் தேதி இரவு முதல் நேற்று அதிகாலை வரை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பஸ்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? முறையாக வரி செலுத்தப்பட்டுள்ளதா? பெர்மிட் உள்ளதா? என ஆய்வு செய்தனர்.

1,040 ஆம்னி பஸ்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 166 ஆம்னி பஸ்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பஸ்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 600 அபராதம் வசூல் செய்யப்பட்டது. மேலும் ரூ.3 ஆயிரத்து 480 வரி வசூலிக்கப்பட்டது.



Next Story