ஊட்டி ரெயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தூய்மை குறித்து விழிப்புணர்வு


ஊட்டி ரெயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தூய்மை குறித்து விழிப்புணர்வு
x
தினத்தந்தி 16 Nov 2018 10:15 PM GMT (Updated: 16 Nov 2018 9:52 PM GMT)

ஊட்டி ரெயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஊட்டி,

பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இயக்க சேவை என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் உள்ள அனைத்து சுற்றுலா தலங்கள் மற்றும் பிற இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி இந்தியாவில் 650 சுற்றுலா தலங்கள் தேர்வு செய்யப்பட்டு, தூய்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், வேளாங்கண்ணி, திருவாரூர், தாராசூரம், மதுரை, நீலகிரி உள்ளிட்ட முக்கியமான சுற்றுலா தலங்களில் பள்ளி மாணவர்கள், சுற்றுலா பயணிகளுக்கு மத்திய சுற்றுலாத்துறையின் கீழ் இயங்கும் இந்திய சுற்றுலா மேலாண்மை நிறுவனத்துடன் தமிழக சுற்றுலாத்துறை இணைந்து நிகழ்ச்சியை நடத்துகிறது.

அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் ஊட்டி ரெயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தூய்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. குன்னூரில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயிலில் வந்த உள்நாடு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தூய்மை பாரதத்தை வலியுறுத்தும் வகையில் தொப்பிகள் வழங்கப்பட்டது. ரெயில் நிலையத்தின் முன்பகுதியில் தமிழர்களின் பாரம்பரிய கலையான தப்பாட்டத்தை கலைஞர்கள் அடித்தனர்.

மலை ரெயிலில் இருந்து இறங்கி வெளியே வந்த சுற்றுலா பயணிகள் தப்பாட்டத்தை ரசித்து பார்த்ததோடு, இசைக்கு ஏற்ப நடனம் ஆடி மகிழ்ந்தனர். அப்போது வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 2 பேர் பாரம்பரிய கலையான தப்பாட்டத்தை கண்டு ரசித்ததோடு, அதுகுறித்து கேட்டறிந்தனர். இந்திய சுற்றுலா மேலாண்மை நிறுவனத்தை சேர்ந்த அபிலாஷ், சரத் சந்திரர், ஊட்டி ரெயில் நிலைய அதிகாரி பிரமோத் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி குறித்து நீலகிரி மாவட்ட சுற்றுலா அலுவலர் ராஜன் கூறியதாவது:–

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவதால், அவர்கள் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள், ஓட்டல் உரிமையாளர்களுக்கு தூய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது சுற்றுலா பயணிகள் செல்லும் சுற்றுலா தலங்களில் குப்பை போடாமல் தூய்மையாக வைக்கவும், தங்கும் போது தரமான உணவு, குடிநீர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு சுற்றுலா தலங்களை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.


Next Story