திருபுவனையில் 20 ரூபாய்க்காக தொழிலாளியை கொன்ற கொடூரம்; ரவுடி கைது


திருபுவனையில் 20 ரூபாய்க்காக தொழிலாளியை கொன்ற கொடூரம்; ரவுடி கைது
x
தினத்தந்தி 21 Nov 2018 5:00 AM IST (Updated: 21 Nov 2018 12:35 AM IST)
t-max-icont-min-icon

திருபுவனையில் மது குடிக்க 20 ரூபாய் கேட்டு தொழிலாளியை கொன்றது தெரியவந்தது. இதுதொடர்பாக கைதான ரவுடி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருபுவனை,

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 46). இவர் திருபுவனை பாளையத்தில் வாடகை வீட்டில் மனைவி மற்றும் மகனுடன் தங்கி இருந்து அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு லட்சுமணனின் மனைவி விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து தனது மகனை ஒடிசாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு லட்சுமணன் மட்டும் இங்கு தனியாக இருந்து வந்தார். மது பழக்கத்துக்கு அடிமையானார். இந்த நிலையில் திருபுவனையை அடுத்த பெரியபேட்டில் உள்ள கரும்பு தோட்டத்தில் லட்சுமணன் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுபற்றி திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அந்த பகுதியில் கிரிக்கெட் விளையாடிய சிறுவர்களிடம் விசாரித்ததில், பெரியபேட்டை சேர்ந்த ரவுடி சசி என்ற சசிக்குமார் (வயது 45), லட்சுமணனை கரும்பு தோட்டத்துக்கு அழைத்துச்சென்றதாக கூறினர். இதையடுத்து அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சசியின் செல்போனுக்கு அவரது கூட்டாளி போல் பேசி அவரது இருப்பிடத்தை விசாரித்தபோது வளவனூர் பஸ் நிறுத்தத்தில் இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு சென்று சசியை கைது செய்து திருபுவனை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். விசாரணையில், 20 ரூபாய்க்காக லட்சுமணனை சசி கழுத்தை அறுத்து கொலை செய்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதன் விவரம் வருமாறு:-

லட்சுமணனும், சசியும் தினமும் மாலையில் ஒன்றாக மதுகுடிப்பது வழக்கம். சம்பவத்தன்றும் மது குடிக்க அங்குள்ள கரும்பு தோட்டத்துக்கு இருவரும் சென்றனர். அன்று மதுவாங்கி கொடுப்பது சசியின் முறையாம். ஆனால் அவரிடம் மதுவாங்க 20 ரூபாய் குறைவாக இருந்ததால், லட்சுமணனிடம் பணம் கேட்டார். அவர் பணம் இல்லை என்று கூறிவிட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திர மடைந்த சசி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லட்சுமணன் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் வெளியூர் தப்பிச் செல்வதற்காக வளவனூர் பஸ் நிறுத்தத்தில் சசி பதுங்கியிருந்தபோது போலீசாரிடம் சிக்கிக்கொண்டார்.

ரவுடியான சசி மீது பிரபல ரவுடியான உழவர்கரை தெஸ்தான் கொலை மற்றும் வழிப்பறி, அடிதடி வழக்குகள் உள்ளன. கைது செய்யப்பட்ட சசியை போலீசார் புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கொலையாளியை விரைவாக கைது செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் பிரியா ஆகியோரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா, போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் ஆகியோர் பாராட்டினார்கள்.
1 More update

Next Story