நந்தீஸ்-சுவாதி தம்பதி ஆணவ கொலையை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் தொல்.திருமாவளவன் கோரிக்கை


நந்தீஸ்-சுவாதி தம்பதி ஆணவ கொலையை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் தொல்.திருமாவளவன் கோரிக்கை
x
தினத்தந்தி 21 Nov 2018 4:30 AM IST (Updated: 21 Nov 2018 3:11 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் நந்தீஸ்-சுவாதி தம்பதி ஆணவ கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்து உள்ளார்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த நந்தீஸ்-சுவாதி தம்பதி ஆணவ படுகொலையை கண்டித்து ஓசூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் மேலும் ஒரு ஆணவ கொலை ஓசூர் அருகே நிகழ்ந்துள்ளது. அண்மைக்காலமாக சாதியின் பெயரால் இத்தகைய படுகொலைகள் அதிகரித்து வருகின்றன. நந்தீஸ்-சுவாதி இருவரும் ஒருவரையொருவர் விரும்பி திருமணம் செய்து கொண்டதால், பெண்ணின் குடும்பத்தார் ஆத்திரமடைந்து அவர்கள் இருவரையும் கடத்தி சென்று மிகவும் கொடூரமாக கொலை செய்து, கை, கால்களை கட்டி காவிரி ஆற்றில் வீசியுள்ளனர்.

இதுபோன்ற கொடுமை, தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இத்தகைய ஆணவ கொலைகளை தடுப்பதற்கு தனி சட்டம் இயற்றப்பட வேண்டும். இந்த குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து ஜாமீனில் வெளிவராதவாறு சிறையில் வைத்து, வழக்கை விரைவாக முடித்து, தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

வழக்கமாக இத்தகைய சம்பவங்களில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ், வழக்குகள் பதிவு செய்யப்படும். ஆனால் இந்த வழக்கு இன்னும் அந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிகிறது. எனவே இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து விசாரிக்க வேண்டும். இந்த ஆணவ கொலையில் தொடர்புடையவர்களை சரியாக அடையாளம் கண்டு கைது செய்வதற்கு ஏற்றவகையில், தமிழக அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும்.

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தொடர்புடைய 3 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பது, தமிழக அரசுக்குரிய நன்மதிப்பை சீர்குலைப்பதாகவே உள்ளது என நான் கருதுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் இதில் துணைப்பொதுச்செயலாளர் வன்னியரசு, தலைமை நிலைய செயலாளர் தமிழ்ச்செல்வன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கனியமுதன், மாநில அமைப்பு செயலாளர் கோவேந்தன், ஓசூர் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் செந்தமிழ், மாவட்ட பொருளாளர் மாயவன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிாவாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் சார்பில் நிதியுதவியாக ரூ.2½ லட்சத்தை நந்தீசின் குடும்பத்திற்கு தொல்.திருமாவளவன் வழங்கினார். 
1 More update

Next Story