தலைவாசல் போலீஸ் நிலையத்தில் குடிபோதையில் விஷம் குடித்ததாக நாடகமாடிய ஏட்டு - நடவடிக்கை எடுக்க பரிந்துரை


தலைவாசல் போலீஸ் நிலையத்தில் குடிபோதையில் விஷம் குடித்ததாக நாடகமாடிய ஏட்டு - நடவடிக்கை எடுக்க பரிந்துரை
x
தினத்தந்தி 20 Nov 2018 11:08 PM GMT (Updated: 20 Nov 2018 11:08 PM GMT)

தலைவாசல் போலீஸ் நிலையத்தில், குடிபோதையில் விஷம் குடித்ததாக நாடகமாடிய ஏட்டு மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தலைவாசல்,

தலைவாசல் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டு, குடிபோதையில் விஷம் குடித்ததாக நாடகமாடியது தெரியவந்தது. அவர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தலைவாசல் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் வெள்ளையன் (வயது 46). இவர் சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்தவர். நேற்றுமுன்தினம் மாலை 3.30 மணிக்கு தலைவாசல் போலீஸ் நிலையத்தில் இருந்த ஏட்டு வெள்ளையன் திடீரென்று விஷம் குடித்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் அவரை போலீசார், ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. மேலும் அவர் சிகிச்சையை ஏற்க மறுத்து டாக்டர்கள், நர்சுகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது ஏட்டு வெள்ளையன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சேலம் ஆஸ்பத்திரியில் நடந்த பரிசோதனையில், வெள்ளையன் விஷம் குடிக்க வில்லை என்பது தெரியவந்தது. மதுகுடித்து விட்டு, போதையில் விஷம் குடித்ததாக நாடகமாடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பொன் கார்த்திக் குமார், தலைவாசல் இன்ஸ்பெக்டர் குமரவேல்பாண்டியன் ஆகியோர் போலீஸ் சூப்பிரண்டு ஜோர்ஜி ஜார்ஜிக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

ஏட்டு வெள்ளையன் போலீஸ் நிலையத்தில் அடிக்கடி சக போலீசாருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கு கட்டுப்படுவது இல்லை என்றும், இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் முடிவு செய்து இருந்ததாகவும் தெரிகிறது. எனவே அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக குடிபோதையில் விஷம் குடித்து விட்டதாக நாடகமாடி உள்ளார் என போலீசார் தெரிவித்தனர். இதன் காரணமாக அவர் மீது விரைவில் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.



Next Story