புதுவையில் பலத்த மழை; விமான சேவைகள் ரத்து, பள்ளிகளுக்கு இன்று விடுமுறை


புதுவையில் பலத்த மழை; விமான சேவைகள் ரத்து, பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
x
தினத்தந்தி 21 Nov 2018 11:30 PM GMT (Updated: 21 Nov 2018 7:42 PM GMT)

புதுவையில் இடைவிடாது மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

புதுச்சேரி,

வங்ககடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுவையில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. காலை 9 மணி முதல் மழை மீண்டும் பெய்யத்தொடங்கியது. இந்த மழை நேற்று முழுவதும் விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. இந்த மழை நேற்று நள்ளிரவு வரை நீடித்தது. புதுவையில் நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 1.7 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.

மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.இது பற்றிய தகவல் அறிந்த உடன் பொதுப்பணித்துறை, உள்ளாட்சி துறை, நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.

இந்த மழையின் காரணமாக பாரதிதாசன் கல்லூரி அருகே ஒரு மரம் சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்த உடன் பொதுப்பணித்துறை, உள்ளாட்சி துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று அந்த மரத்தை துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

நேற்று கடலின் சீற்றம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. தங்கள் படகுகளை பத்திரமாக தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

மோசமான வானிலை காரணமாக நேற்று பெங்களுரூ, ஹைதராபாத்தில் இருந்து புதுவைக்கு வரும் விமானங்களும், புதுவையில் இருந்து செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. எனவே முன்பதிவு செய்திருந்த பயணிகள் சிலர் தங்கள் பயண தேதியை மாற்றி அமைத்துக்கொண்டனர். சிலர் தங்கள் முன்பதிவை ரத்து செய்து விட்டு கார், பஸ்கள் மூலமாக சென்றனர்.

இந்த நிலையில் கனமழை எதிரொலியாக புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக்கு இன்று(வியாழக்கிழமை) விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு பிறப்பித்துள்ளார்.


Next Story