கோவில்பட்டியில் குற்றங்களை தடுக்க அனைத்து தெருக்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் - போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தகவல்


கோவில்பட்டியில் குற்றங்களை தடுக்க அனைத்து தெருக்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் - போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தகவல்
x
தினத்தந்தி 22 Nov 2018 4:45 AM IST (Updated: 22 Nov 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் குற்றங்களை தடுக்க அனைத்து தெருக்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தெரிவித்தார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா நேற்று ஆய்வு நடத்தினார். பின்னர் அவர், போலீஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டினார். தொடர்ந்து அவர், கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகியவற்றிலும் ஆய்வு நடத்தினார்.

முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவில்பட்டியில் குற்ற செயல்களை தடுக்க, அனைத்து தெருக்களிலும் தன்னார்வலர்கள் மூலம் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வசதி வாய்ப்பு உள்ளவர்கள் தங்களது வீடுகளின் முன்பாக கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும்.

கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம், புதுகிராமத்தில் உள்ள புறக்காவல் நிலையங்களில் 24 மணி நேரமும் போலீசார் பணியமர்த்தப்படுவார்கள். கோவில்பட்டி நகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் போலீசாரின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு உள்ளது.

வழக்குகளில் சம்பந்தப்பட்ட வாகனங்கள், பல ஆண்டுகளாக போலீஸ் நிலையம், கோர்ட்டு வளாகம் உள்ளிட்ட இடங்களில் நிறுத்தப்பட்டு உள்ளன. அவைகள் உருக்குலைந்த நிலையில் உள்ளன. கோர்ட்டில் அனுமதி பெற்று, அந்த வாகனங்களை ஏலம் விடவோ அல்லது அப்புறப்படுத்தவோ ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

அவருடன் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விநாயகம், ஸ்டெல்லாபாய் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.



Next Story