ஓடும் பஸ்சில் தொழில் அதிபரிடம் 21 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு


ஓடும் பஸ்சில் தொழில் அதிபரிடம் 21 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 21 Nov 2018 10:15 PM GMT (Updated: 2018-11-22T03:05:58+05:30)

திருச்சியில் ஓடும் பஸ்சில் தொழில் அதிபரிடம் 21 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருடிய ஆசாமிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(வயது69). தொழில் அதிபர். இவரது மகன் திருச்சி விமான நிலையப்பகுதியில் உள்ள மொரைஸ்சிட்டி என்ற இடத்தில் வசித்து வருகிறார். மகனை பார்ப்பதற்காக முசிறியில் இருந்து அரசு பஸ்சில் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் வந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து விமான நிலையம் நோக்கி சென்ற அரசு டவுண் பஸ்சில் பயணித்தார். கையில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மற்றும் 21 பவுன் நகை அடங்கிய பை ஒன்றை வைத்திருந்தார். விமான நிலைய பஸ் நிறுத்தத்தில் இறங்கிய அவர், அங்கிருந்து மகன் வீட்டிற்கு சென்று ஓய்வெடுத்தார்.

தூங்கி எழுந்த பின்னர் பாலசுப்பிரமணியன் தான் கொண்டு வைத்த கைப்பையை திறந்து பார்த்தார். அப்போது அதில் இருந்த நகை, பணம் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். டவுண் பஸ்சில் பயணித்தபோது யாரோ மர்ம ஆசாமி, பையில் இருந்த 21 பவுன் நகை மற்றும் பணத்தை திருடியிருக்கலாம் என தெரிகிறது. பறிபோன நகையின் மதிப்பு ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் ஆகும்.

இது குறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜை சந்தித்து பாலசுப்பிரமணியன் புகார் கொடுத்தார். அவர், அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி திருச்சி விமான நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பெரியய்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story