கமுதி ஜவுளி வியாபாரி கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஜவுளி வியாபாரியை வெட்டிக் கொலை செய்ததாக கைதான வாலிபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே ராமசாமிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜவுளி வியாபாரி ஜெயராமன் (வயது 37). இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது மர்மமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர்கள் தேவசங்கரி, ஜான்சிராணி, லட்சுமி, சப்–இன்ஸ்பெக்டர்கள் முருகன், சரவணன், கருப்பையா மற்றும் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இறந்த ஜெயராமனின் மனைவி பொன்னாத்தாள் என்ற பொன்னுமணி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பொன்னுமணிக்கு ராமசாமிபட்டியை சேர்ந்த செல்வராஜ் மகன் அசோக்குமார் என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் மதுரை அண்ணாநகர் போலீசில் அசோக்குமார் சரணடைந்தார். அவரை கமுதிக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அசோக்குமார் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–
ராமசாமிபட்டி கிராமத்தில் எனது வீட்டுக்கு எதிரே பொன்னுமணியின் வீடு உள்ளது. அவரது தந்தை வெளிநாட்டில் இருப்பதால் தாய் விஜயாவுடன் வசித்து வந்தார். பொன்னுமணி படிக்கும் போதே எனக்கும், அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் புதிய வீடு கட்டும் போது நான் அனைத்து வேலைகளையும் முன்னெடுத்து செய்தேன். இதனால் பொன்னுமணியுடன் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்தது. நாளடைவில் இது காதலாக மாறியது. நாங்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எங்கள் காதல் நிறைவேறவில்லை.
இந்த நிலையில்தான் பொன்னுமணிக்கும், வெளிநாட்டில் இருந்து வந்த ஜெயராமனுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்பும் தாய் வீட்டில் வசித்து வந்த பொன்னுமணியுடன் எனது நட்பும், காதலும் தொடர்ந்தது. அதன் பின்னர் ஜெயராமன் ஊருக்கு திரும்பி வந்து இரு சக்கர வாகனத்தில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். அவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்தன. இருந்தாலும் நாங்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தோம்.
எங்களது கள்ளக்காதல் ஜெயராமனுக்கு தெரியவந்தது. என்னை சந்திக்க விடாமல் ஜெயராமன் பொன்னுமணிக்கு கட்டுப்பாடு விதித்தார். இதனால் அவர் மீது ஆத்திரம் கொண்டேன். எங்களது கள்ளத்தொடர்பு காரணமாக 2½ வருடங்களுக்கு முன்பு ஜெயராமன், பொன்னுமணி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர். பொன்னுமணி அவரது தாயார் வீட்டில் இருந்ததால் எனக்கு வசதியாக இருந்தது.
இருவரும் விவாகரத்து செய்யும் நிலைக்கு சென்றவுடன் கிராம முக்கிய பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி கணவன்–மனைவி இருவரையும் சேர்த்து வைத்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் கமுதி சிங்கன்ராவ் காம்பவுண்டு தெருவில் குடியேறினர். ஜெயராமன் கமுதியில் ஜவுளிக்கடை தொடங்கி நடத்தி வந்தார். பொன்னுமணி கமுதியில் குடியேறியது எனக்கு மிகவும் மனஉளைச்சலை ஏற்படுத்தியது. இருந்தாலும் அவ்வப்போது தாய் விஜயாவை பார்ப்பதற்காக பொன்னுமணி அடிக்கடி ஊருக்கு வருவார். அப்போது கிளாமரம் பஸ் நிறுத்தம் அருகே நாங்கள் இருவரும் சந்தித்து பேசிக்கொண்டிருந்தபோது தன்னை கணவர் துன்புறுத்துவதாக தெரிவித்தார்.
எங்கள் உறவுக்கு இடையூறாக இருந்ததால் ஜெயராமனை தீர்த்துக்கட்ட முடிவு செய்து இது குறித்து பொன்னுமணியிடம் தெரிவித்தேன். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்து வீட்டுக்கு வரும்படி கூறினார். கடந்த 24–ந்தேதி ஜெயராமன் மதுரை சென்று விட்டதாகவும், இரவு தான் அவர் வீடு திரும்புவார் என்றும் பொன்னுமணி கூறியதால் நான் அவர்களது வீட்டுக்கு சென்றேன். அங்கிருந்தபோது இரவு ஜெயராமன் வீடு திரும்பினார். அப்போது நான் மாடியில் உள்ள அறையில் பதுங்கிக்கொண்டேன்.
பொன்னுமணி கீழே சென்று ஜெயராமனுக்கு சாப்பாடு வைத்துவிட்டு அவரிடம் தூக்கம் வருவதாக கூறிவிட்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு மாடிக்கு வந்துவிட்டார். பின்னர் இரவு 12 மணியளவில் பொன்னுமணி கீழே சென்று ஜெயராமன் தூங்கிவிட்டாரா என பார்த்து விட்டு என்னிடம் வந்து கூறினார். அதனை தொடர்ந்து கீழே சென்ற நான் வெளிநாட்டு கத்தியை பயன்படுத்தி ஜெயராமனின் கழுத்து, பிடறி ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டினேன். அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
இந்த சம்பவத்தில் மர்ம கும்பல் ஈடுபட்டதாக அனைவரும் நம்ப வேண்டும் என்பதற்காக பொன்னுமணியை மாடியில் உள்ள அறையில் வைத்து பூட்டினேன். அதன் பின்பு கீழே வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜெயராமனை இழுத்து வந்து வீட்டின்வெளியே போட்டு விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டேன். இந்த கொலை தொடர்பாக போலீசார் பொன்னுமணியை கைது செய்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்து விட்டேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து பொன்னுமணி, அசோக்குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து கமுதி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.