பிளாஸ்டிக் தடை சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்; வியாபார தொழில்துறை சங்கம் முதல்–அமைச்சருக்கு மனு


பிளாஸ்டிக் தடை சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்; வியாபார தொழில்துறை சங்கம் முதல்–அமைச்சருக்கு மனு
x
தினத்தந்தி 27 Nov 2018 11:09 PM GMT (Updated: 27 Nov 2018 11:09 PM GMT)

தமிழக அரசு அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்த உள்ள பிளாஸ்டிக் தடை சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என விருதுநகர் தொழில்துறை சங்கம் கோரி உள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் வியாபார தொழில்துறை சங்க தலைவர் வி.வி.எஸ்.யோகன், முதல்–அமைச்சருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

தமிழக அரசின் ஆணை எண் 84–ன்படி குறு மற்றும் சிறு நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பிளாஸ்டிக் பொருட்கள் அடுத்த ஆண்டு முதல் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை இல்லை. இதனால் குறு,சிறு நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை.

இந்தநிலையில் அந்த மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பிளாஸ்டிக் பொருட்கள் வருவதை தடுக்க வாய்ப்பு இருக்காது. பிற மாநிலங்களில் தடை இல்லாமல் தமிழகத்தில் மட்டும் தடை செய்வதால் நம்முடைய உற்பத்தி மற்றும் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். அதிலும் பிளாஸ்டிக் உற்பத்தியை வாழ்வாதாரமாக கொண்டுள்ள சிறு நிறுவனங்களும் அவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்படுவர்.

தமிழகத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்தெடுக்கும் முறையை முழுமையாக செயல்படுத்திட வேண்டும். மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் கனவு திட்டமான பிளாஸ்டிக் தார்சாலை இதுவரை அமைக்கப்படவில்லை. இவைகளை நிறைவேற்றுவதால் கழிவு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை அதிகரித்து மாசு ஏற்படுவதை தடுக்க முடியும்.

எனவே பொதுமக்கள் நலனிலும், குறு,சிறு நிறுவனங்களின் வளர்ச்சியிலும் அக்கறை உள்ள தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு அமல்படுத்த உள்ள தடையை உடனடியாக செயல்படுத்தாமல் நிறுத்தி வைத்து அதற்கு நல்ல தீர்வு காண வேண்டுகிறோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story