முல்லை பெரியாறு விவகாரம்: தமிழக அரசு அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும், அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
முல்லை பெரியாறு விவகாரம் குறித்து ஆலோசிக்க தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
மதுரை,
மதுரை விமான நிலையத்தில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மத்திய அரசு, அணைகள் பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சட்டமாக கொண்டுவர முயற்சி செய்கிறது. இதனை தடுக்கவில்லை என்றால், முல்லை பெரியாறு கேரளா அரசுக்கு சென்று விடும். எனவே இதுகுறித்து ஆலோசிக்க தமிழக அரசு உடனடியாக முதல்–அமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.
கஜா புயல் பாதித்த இடங்களை பார்க்க பிரதமரோ அல்லது மூத்த மந்திரிகளோ வரவில்லை. இதன் காரணமாகவே, மீட்பு பணிகளும் சரிவர நடக்கவில்லை. விவசாயிகள் தற்கொலை செய்து வருகிறார்கள். முதலில் அவர்களுக்கு அதற்கான ‘கவுன்சிலிங்‘ வழங்க வேண்டும். மத்திய அரசு தமிழகத்தின் முதலாளி. ஆகவே தமிழக அரசு அவர்களிடம் அடிபணிந்து போகிறது.
காவிரி குறித்து உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்தநிலையில், மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது கண்டனத்துக்குரியது. 40 ஆண்டுகள் சட்ட போராட்டத்திற்கு பிறகு காவிரி ஆணையம் அமைந்தது. தற்போது தீர்வு வரும் சூழ்நிலையில் கர்நாடகாவில் மக்களவை தேர்தல் அரசியல் லாபத்திற்கு மத்திய அரசு இந்த முடிவை செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.