அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் பா.ஜனதா - இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மோதல்


அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் பா.ஜனதா - இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மோதல்
x
தினத்தந்தி 6 Dec 2018 11:00 PM GMT (Updated: 6 Dec 2018 8:46 PM GMT)

திருச்சியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் பா.ஜனதா- இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேருக்கு நேர் கோஷம் எழுப்பியதால் மோதல் ஏற்பட்டு பரபரப்பு உண்டானது.

திருச்சி,

இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இதில் அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க, தே.மு.தி.க, விடுதலை சிறுத்தைகள் உள்பட அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் தனித்தனியாக மாலை அணிவித்தனர்.

பாரதீய ஜனதா கட்சியினரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரும் மாலை அணிவிக்க ஒரே நேரத்தில் வந்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மாநில குழு உறுப்பினர்கள் இந்திரஜித், சுரேஷ் உள்பட நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த போது சிலை அருகில் பாரதீய ஜனதா கட்சியினர் மாநகர் மாவட்ட தலைவர் தங்க ராஜய்யன், மண்டல் தலைவர் ராஜசேகர் உள்பட பலர் கையில் கொடியுடன் நின்று கொண்டிருந்தனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அம்பேத்கர் வாழ்க என கோஷம் போட்டதோடு மதவாத சக்திகளை விரட்டியடிப்போம், வெல்லட்டும் வெல்லட்டும் ஜனநாயகம் வெல்லட்டும் என கோஷம் எழுப்பினார்கள். உடனே பதிலுக்கு பாரதீய ஜனதா கட்சியினர் பாரத் மாதா கீ ஜே, அந்நிய நாட்டின் கைக்கூலிகளை விரட்டி அடிப்போம், தேச துரோகியை ஒழிப்போம், உண்டியலை ஒழிப்போம் என கோஷம் எழுப்பினார்கள். இரண்டு கட்சியினரும் ஒருவரை தாக்கி ஒருவர் எழுப்பிய கோஷங்களை தொடர்ந்து தொண்டர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டு பெரும் பரபரப்பானது.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கண்டோன்மெண்ட் சரக உதவி போலீஸ் கமிஷனர் சிகாமணி தலைமையிலான போலீசார் இடையில் புகுந்து கைகலப்பு நடக்க விடாமல் தடுத்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சிலை பீடத்தில் இருந்து இறங்கியதும் பாரதீய ஜனதா கட்சியினரை மாலை அணிவிப்பதற்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் மாலை அணிவித்து விட்டு கீழே இறங்கியதும் மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அப்போது போலீசார் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அங்கிருந்து புறப்பட்டனர். இதனை தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சியினரும் இன்னொரு பாதை வழியாக சென்றனர். இதனால் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

Next Story