பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி த.மு.மு.க.- எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி த.மு.மு.க.- எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Dec 2018 4:30 AM IST (Updated: 7 Dec 2018 2:31 AM IST)
t-max-icont-min-icon

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நேற்று பெரம்பலூரில் த.மு.மு.க.வினர் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்,

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நேற்று பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்திசிலை முன்பு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு த.மு.மு.க.வின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் சுல்தான் மொய்தீன் தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் மீரான்மொய்தீன், த.மு.மு.க.வின் மாவட்ட செயலாளர் குதரத்துல்லாக் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். இதில் சமூக நீதி மாணவர் இயக்கத்தின் மாநில துணை செயலாளர் அரபாத் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து பாபர் மசூதியை அதே இடத்தில் மீண்டும் கட்டி கொடுக்க வேண்டும். பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் என சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ள குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்திஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி எஸ்.டி.பி.ஐ. கட்சி (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா) சார்பில் பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கட்சியின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் முகம்மது ரபிக் தலைமை தாங்கினார். செயலாளர் ஷாஜகான், பொருளாளர் ஜியாவுதீன் அகமது உள்பட பலர் முன்னிலை வகித்தனர். இந்த 2 ஆர்ப்பாட்டங்களிலும் தி.மு.க. பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஞானசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் அருள், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளர் காமராசு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதேபோல் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கமாலுதீன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஷேக்இப்ராஹிம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஷாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் உலகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மணிவேல், திராவிடர் கழக மண்டல தலைவர் காமராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் கதிர்வளவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Next Story