மதுரை அருகே தொழிலாளி வெட்டிக் கொலை; போலீஸ் தேடும் வாலிபரின் அண்ணன் திடீர் சாவு


மதுரை அருகே தொழிலாளி வெட்டிக் கொலை; போலீஸ் தேடும் வாலிபரின் அண்ணன் திடீர் சாவு
x
தினத்தந்தி 9 Dec 2018 11:00 PM GMT (Updated: 9 Dec 2018 8:09 PM GMT)

சோழவந்தான் அருகே முன்விரோதத்தில் கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக தேடப்படும் வாலிபரின் அண்ணன் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.

சோழவந்தான்,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கருப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர்(வயது 48). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(35) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது.

இந்தநிலையில் நேற்று சந்திரசேகர் அங்குள்ள வைகை ஆற்று பகுதிற்கு சென்றார். இவரை பின்தொடர்ந்து சென்ற கிருஷ்ணமூர்த்தி, சந்திரசேகர் தலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடி விட்டார்.

இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய கொண்டிருந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கிருஷ்ணமூர்த்தியை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், தனது தம்பியை கொலை வழக்கில் போலீசார் தேடுகிறார்களே என கிருஷ்ணமூர்த்தியின் அண்ணன் மனவருத்தம் அடைந்தார்.தம்பியை போலீசார் கைது செய்யவிடுவார்களே என புலம்பி கொண்டிருந்த அவர், சிறிதுநேரத்தில் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. சற்று நேரத்தில் பரிதாபமாக இறந்தார். கிருஷ்ணமூர்த்தியின் அண்ணன் திருநங்கை என்றும், அவர் சாந்தி என அழைக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. அவரது சாவு தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story