பல்லடத்தில் ஜவுளி சந்தை அமைக்க வேண்டும் - அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை


பல்லடத்தில் ஜவுளி சந்தை அமைக்க வேண்டும் - அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை
x
தினத்தந்தி 9 Dec 2018 11:09 PM GMT (Updated: 9 Dec 2018 11:09 PM GMT)

பல்லடத்தில் ஜவுளி சந்தை அமைக்க வேண்டும் என்று அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்து உள்ளார்.

பல்லடம்,

பல்லடத்தில் நடந்த த.மா.கா. பிரமுகர் இல்ல விழாவில் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காமராஜர் ஆட்சி காலத்தில் போடப்பட்டு கடந்த 52 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை உடனே அரசு செயல்படுத்த வேண்டும். மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசையும் அதற்கு உறுதுணையாக இருக்கும் மத்திய அரசையும் கண்டிக்கிறோம். இந்த திட்டத்தை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழகத்தில் உள்ள விசைத்தறியாளர்கள் பல்வேறு காரணங்களால் தொழில் நலிவடைந்து பாதிப்பு அடைந்து உள்ளனர். இதனால் அவர்கள் வங்கியில் வாங்கிய சுமார் ரூ.65 கோடி கடன் தொகையை அரசு தள்ளுபடி செய்து அந்த தொழிலை காப்பாற்ற வேண்டும். மேலும் முத்ரா திட்டத்தின் கீழ் விசைத்தறியாளர்களுக்கு கடன் வழங்கி நலிந்து வரும் விசைத்தறி தொழிலை மேம்படுத்த வேண்டும். இதன் மூலம் 10 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.

விசைத்தறியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பல்லடத்தில் ஜவுளி சந்தை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 2014 ம் ஆண்டு போடப்பட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் - விசைத்தறியாளர்களின் கூலி ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும். பல்லடம் அரசு மருத்துவமனையில் அவசர விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு இருந்தும் ரத்த வங்கி இல்லாததால் கோவை, திருப்பூருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த குறையை தீர்க்க சுகாதார துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல்லடம் நகரில் வாகன போக்குவரத்து நெருக்கடி மற்றும் வாகன விபத்துகள் அதிகரித்து வருவதை தடுக்க புறவழிசாலை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர், மாவட்ட நிர்வாகிகள் வக்கீல் சண்முகம், காரணம்பேட்டை சின்னசாமி, என்.வி.ராமசாமி,எஸ்.ஜெகதீசன் மற்றும் முத்துக்குமார், கணேசன், பொன்னையா உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story