குடோனில் பதுக்கி வைத்து இருந்த 255 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - உணவு பாதுகாப்பு அதிகாரி நடவடிக்கை


குடோனில் பதுக்கி வைத்து இருந்த 255 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - உணவு பாதுகாப்பு அதிகாரி நடவடிக்கை
x
தினத்தந்தி 11 Dec 2018 3:45 AM IST (Updated: 11 Dec 2018 3:55 AM IST)
t-max-icont-min-icon

காங்கேயத்தில் குடோனில் பதுக்கி வைத்து இருந்த 255 கிலோ புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரி பறிமுதல் செய்தார்.

காங்கேயம்,

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா மற்றும் போதை தரும் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கலெக்டர் உத்தரவின்படி, உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அதிகாரி கே.தமிழ்ச்செல்வன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாலமுருகன், சதீஸ்குமார், ராமச்சந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று காங்கேயம் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

குறிப்பாக காங்கேயம் பஸ்நிலையம் பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் சோதனை செய்த போது, குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து பெட்டிக்கடைக்காரர்களிடம், உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விசாரணை செய்தார். அப்போது காங்கேயம் திருவள்ளுவர் வீதியில் வசித்து வரும் குமார் (38) என்பவர்தான் புகையிலை பொருட்களை சப்ளை செய்வதாக தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி தலைமையில் அலுவலர்கள் குமாரின் வீட்டிற்கு சென்றனர். அப்போது குமாரின் வீட்டையொட்டி, கடை மற்றும் குடோன் இருந்தது. இதையடுத்து அந்த குடோனில் அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது அங்கு குட்கா, பான்மசாலா உள்ளிட்ட 5 வகையான புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. அதன்படி அங்கு மூடைகளில் வைக்கப்பட்டிருந்த மொத்தம் 255 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 75 ஆயிரமாகும்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்கள் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ் உணவு மாதிரி எடுக்கப்பட்டு பகுப்பாய்விற்கு அனுப்பப்படும் என்றும், இந்த ஆய்வு அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ், குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

உணவு கலப்படம் குறித்தும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது,போலி கலப்பட டீ தூள், கலப்பட எண்ணெய் விற்பனை செய்வதுதெரியவந்தால் 94440-42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி தெரிவித்தார். 

Next Story