நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனின் மனைவி கடத்தப்பட்ட விவகாரம்: கைது செய்யப்பட்ட 5 பேரிடம் தீவிர விசாரணை


நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனின் மனைவி கடத்தப்பட்ட விவகாரம்: கைது செய்யப்பட்ட 5 பேரிடம் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 12 Dec 2018 4:30 AM IST (Updated: 12 Dec 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனின் மனைவி கடத்தப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முரண்பட்ட தகவலால் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர்.

பூந்தமல்லி,

சென்னை அண்ணா நகர், எல்.பிளாக்கில் வசித்து வருபவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் லத்திகா, ஆனந்த தொல்லை, கன்னா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகனாகவும், காமெடி நடிகராகவும் நடித்துள்ளார். இவரது மனைவி ஜூலி கடந்த 6–ந் தேதி தனது கணவரை காணவில்லை என்று அண்ணா நகர் போலீசில் புகார் அளித்து இருந்தார்.

இதுகுறித்து அண்ணா நகர் போலீசார் விசாரணை செய்தபோது தான் ஊட்டியில் இருப்பதாகவும், சொத்தை பத்திரப்பதிவு செய்வதற்காக வந்துள்ளதாகவும் பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்தார். மேலும் போலீசில் புகார் அளித்த அவரது மனைவியும் அவருடன் இருந்தார்.

இந்த நிலையில் காணாமல் போனதாக கூறப்பட்ட சீனிவாசன் கடந்த 9–ந் தேதி வீட்டுக்கு வந்தார். தனது மனைவியை பணய கைதியாக ஊட்டியில் பிடித்து வைத்திருப்பதாக கோயம்பேடு போலீசில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஊட்டியில் உள்ள அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஜூலியை மீட்டனர். மேலும் ஆலம் (வயது 49), இவரது நண்பர்கள் நவாஷ் (50), பாஷா (58), சையது அப்துல் மொயின் (58), தாஹீர் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் இருந்து ஊட்டிக்கு சென்ற கோயம்பேடு போலீசார் 5 பேரையும் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் முரண்பாடான தகவல்கள் வெளியாகி உள்ளதால் போலீசார் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்:–

ஆலம் என்பவரிடம் ரூ.90 லட்சத்தை சீனிவாசன் வாங்கி உள்ளார். அந்த பணத்தை கொடுக்காமல் கால தாமதம் ஏற்பட்டதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நடந்து வருகிறது.

இந்த நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசன், உறவினர் ஆலமிடம் சென்று பணம் சம்பந்தமாக வழக்கு நடந்து வருகிறது. நாம் சமாதானமாக போய் விடலாம் என்று கூறியதாகவும் மேலும் ஊட்டியில் உள்ள வீட்டை பத்திரப்பதிவு செய்து கொடுப்பதாகவும் கூறி உள்ளார். அதற்கு ஆலம் சம்மதம் தெரிவித்ததாகவும், இதனால் சீனிவாசன் ஊட்டிக்கு சென்று வீட்டை பத்திரபதிவு செய்ய சென்றுள்ளார்.

மேலும் சொத்து ஜூலி பெயரில் இருப்பதால் அதனை அவர்தான் பத்திரபதிவு செய்ய வேண்டும் என சீனிவாசனே தனது மனைவிக்கு விமான டிக்கெட் எடுத்து ஊட்டிக்கு வரவழைத்துள்ளார்.

பின்பு சீனிவாசன் வீட்டில் உள்ள மகள்களை பார்த்து விட்டு மூல பத்திரம் கொண்டு வருவதாக கூறி சென்றவர் போலீசில் நாங்கள் கடத்தியதாக புகார் அளித்துள்ளதாக பிடிபட்டவர்கள் கூறி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இரு தரப்பினரும் மாறி, மாறி முரண்பட்ட தகவல்களை கொடுத்து வருவதால் இதில் எது உண்மை என்பதை கண்டறிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், விமான டிக்கெட் யார் எடுத்தது. ஓட்டலில் யார் அறை எடுத்தது? அந்த ஓட்டலில் பதிவான காட்சிகளை சேகரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பல்வேறு குழப்பமான தகவல்கள் இருப்பதால் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும், விசாரணை முடிவில் யார் குற்றவாளி? என்பது தெரியவரும்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

பவர் ஸ்டார் சீனிவாசன் வழக்கில் ஆரம்பம் முதல் பரபரப்புடன் கூடிய குழப்பம் இருந்து வந்தது. மேலும் 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையிலும் முரண்பட்ட தகவலால் போலீசார் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story