யானைகள் நலவாழ்வு முகாமை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற 50 பேர் கைது
யானைகள் புத்துணர்வு முகாமை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில் பவானி ஆற்றுப்படுகையில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நேற்று தொடங்கியது. இங்கு முகாம் நடத்தப்படுவதால் காட்டு யானைகளின் வழித்தடம் மறிக்கப்படுவதாகவும், இதனால் அவை வழிமாறி வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே இந்த முகாமை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். இல்லை என்றால் முகாம் தொடங்கும்போது முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் தேக்கம்பட்டி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 23 கிராம விவசாயிகள் அறிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முகாம் தொடங்கும்போது அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வனபத்ரகாளியம்மன் கோவில் முன்பு விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு தலை வர் டி.பாண்டுரங்கன் தலைமையில் பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு போலீஸ் துணை சூப்பிரண்டு மணி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
போராட்டத்தில் 103 வயது மூதாட்டி ரங்கம்மாள் மற்றும் திப்பையன் உள்பட பலர் கலந்து கொண்டுகோஷமிட்டனர். அவர்கள் முகாமை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக சென்றனர். அவர்கள் 50 பேரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் அவர்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த போராட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் டி.ஆர்.சண்முகசுந்தரம், சுரேந்திரன், செல்வராஜ், காங் கிரசை சேர்ந்த ரங்கராஜ், ராஜேந்திரன், பா.ஜ.க. நிர்வாகிகள் சக்திவேல், ஜெகநாதன், செந்தில்குமார், கம்யூனிஸ்டு கட்சி பெருமாள், கனகராஜ் மற்றும் அரங்கசாமி, நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.