வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு விமானங்களில் கடத்திய ரூ.51½ லட்சம் தங்கம் பறிமுதல்
வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு விமானங்களில் கடத்திய ரூ.51½ லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு,
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு மலேசியாவில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பெங்களூருவுக்கு வந்த அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள், அவரது உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் விமான நிலைய போலீசார் சோதனை செய்தார்கள். அப்போது ஒரு பயணி வைத்திருந்த பையில் ஆடைகள் மற்றும் அழகு சாதன பொருட்களுக்குள் தங்க நகைகளை மறைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, தங்க நகைகளை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தார்கள். அவரிடம் இருந்து ஒரு கிலோ 358 கிராம் எடையுள்ள தங்க நகைகள் மீட்கப்பட்டன.
இதுபோல, வெளிநாட்டில் இருந்து பெங்களூருவுக்கு வந்த மற்றொரு விமானத்தில் வந்திருந்த பயணிகளிடம் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது 2 பயணிகளிடம் 319 கிராம் தங்க துகள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அவர்கள் வெளிநாட்டில் இருந்து கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, 2 பயணிகளும் கைது செய்யப்பட்டார்கள். கைதான 3 பேரிடமும் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.51½ லட்சம் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதான 3 பேர் மீதும் விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.