கோவை ஜனசதாப்தி எக்ஸ்பிரசை போல பிற ரெயில்களிலும் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்த திட்டம் அதிகாரி தகவல்


கோவை ஜனசதாப்தி எக்ஸ்பிரசை போல பிற ரெயில்களிலும் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்த திட்டம் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 17 Dec 2018 11:00 PM GMT (Updated: 17 Dec 2018 8:00 PM GMT)

கோவை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி தகடுகள் இருப்பதை போல பிற ரெயில்களிலும் பொருத்த திட்டமிட்டிருப்பதாக ரெயில்வே வட்டாரத்தில் தெரிவித்தனர்.

திருச்சி,

ரெயில்வேயில் டீசல் செலவினத்தை குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கவும் ரெயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் மின்சாரத்தை சேமிக்கும் வகையில் ரெயில் நிலையங்கள், ரெயில் நிலைய நடைமேடைகளின் மேற்கூரைகள், வளாக பகுதிகள், ரெயில்வே அலுவலக கட்டிடங்கள் உள்ளிட்ட இடங்களில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தெற்கு ரெயில்வேயில் ரெயில் பெட்டிகளின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி கோவையில் இருந்து திருச்சி வழியாக மயிலாடுதுறைக்கு இயக்கப்படும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஒரு பெட்டியின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி தகடுகள் கடந்த ஆண்டு பொருத்தப்பட்டன. அதன்பின் அதே ரெயிலில் மேலும் சில பெட்டிகளின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தப்பட்டன. இந்த திட்டம் வரவேற்பை பெற்றுள்ளதாக ரெயில்வே வட்டாரத்தில் தெரிவித்தனர்.

இது தொடர்பாக ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், கோவை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஒரு பெட்டியில் மட்டுமே முதலில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தப்பட்டன. அதன்பின் படிப்படியாக மேலும் 6 பெட்டிகளிலும் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தப்பட்டன. கடந்த அக்டோபர் மாதம் கடைசியாக ஒரு பெட்டி மேற்கூரையில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தப்பட்டன.

மொத்தம் 7 பெட்டிகளின் மேற்கூரையில் இருந்து சூரிய ஒளிமூலம் மின்சாரம் உற்பத்தியாகி ரெயிலில் மின் விளக்குகள் எரியவும், மின் விசிறிகள் இயங்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல பிற ரெயில்களின் மேற்கூரையிலும் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்த தெற்கு ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது” என்றார்.

Next Story