காங்கிரசுடன் த.மா.கா. இணைப்பா? ஜி.கே.வாசன் பதில்


காங்கிரசுடன் த.மா.கா. இணைப்பா? ஜி.கே.வாசன் பதில்
x
தினத்தந்தி 17 Dec 2018 11:00 PM GMT (Updated: 17 Dec 2018 10:51 PM GMT)

காங்கிரசுடன் த.மா.கா. இணைப்பா? என்பதற்கு ஜி.கே.வாசன் பதில் அளித்தார்.

பாகூர்,

புதுச்சேரி மாநிலம் பிள்ளையார்குப்பத்தில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் த.மா.கா. கட்சி நிர்வாகி சிகிச்சை பெற்று வருகிறார். அவரை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் நேற்று வந்தார். அவருடன் அமைச்சர் கந்தசாமி, ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் விக்னேஷ் ஆகியோரும் வந்தனர்.

ஆஸ்பத்திரிக்கு சென்ற ஜி.கே.வாசன் கட்சி நிர்வாகியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். மேலும் டாக்டர்களிடம் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார். அப்போது ஆஸ்பத்திரியின் மருத்துவ கண்காணிப்பாளர் நிர்மல்குமார் உடனிருந்தார்.

பின்னர் வெளியே வந்த, ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கஜா புயலால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். விவசாயிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. புதுவையில் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் இணைந்து நிவாரண பணிகளை மேற்கொண்டனர். முதல்-அமைச்சர் நாராயணசாமி புதுச்சேரி மாநில மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு, மாநிலத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்காக தடைகளை எல்லாம் தாண்டி மக்கள் பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்.

மத்தியில்ஆளும் பா.ஜனதா கட்சிக்கு எதிராக தற்போது உருவாகியுள்ள கூட்டணி, மேலும் பலம் பெறும் என்பது எனது கருத்து. மேலும் பலம்பெற்று மெகா கூட்டணியாக உருவாகும் சூழல் உள்ளது. கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக எல்லா கட்சிகளும் அறிவிக்கும்போது, நாங்களும் எங்கள் கூட்டணி குறித்து அப்போது அறிவிப்போம்.

அதேபோல் தமிழக சட்டமன்றத்துக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தல் குறித்து எல்லா கட்சிகளும் தங்களின் நிலைபாடுகளை அறிவிக்கும் போது, எங்களின் முடிவு குறித்து நாங்கள் அறிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவரிடம் நிருபர்கள், “காங்கிரஸ் கட்சி அமைச்சருடன் வந்துள்ளர்களே, த.மா.கா. வை, காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கும் வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்டனர். அதற்கு நான் த.மா.கா. தலைவராகத்தான் இங்கு வந்துள்ளேன். நான் இங்கு வருவதை அறிந்து மரியாதை நிமித்தமாக அமைச்சர் கந்தசாமி, என்னை வந்து சந்தித்தார். இதில், கட்சியும் இல்லை, அரசியலும் இல்லை. ஒரு குடும்ப நட்பு தான் வேறு ஒன்றும் இல்லை.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

Next Story